பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுருக்கிக் கூறிவிட முடியாது. இவ்வடிகள் பதிகத்துள் காணப்படுகின்றன. பதிகம் பாடியவர் இளங்கோவடிகளல்ல. சாத்தனார் என்று சிலர் கூறுவர். ஆனால் பதிகத்தில், 'அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தான் யானறிகுவன் அது பட்ட தென்றுறைப்பேன்' என்னும் அடிகள் சாத்தனார் இளங்கோவடிகளுக்குக் கண்ணகிக் கதையைக் கூறினாரென்று கூறுகின்றன. சாத்தனார் தண்டமிழ்ச் சாத்தான் எனச் சிறப்பிக்கப்படுகிறார். அவர் தன்னைத்தான் இவ்வாறு சிறப்பித்துக்கொண்டார் என்பது பொருத்தமுடையதல்ல. எனவே பதிகம் பாடியவர் சாத்தனார் அல்ல என்பது தெளிவு. பதிகத்தின் இறுதி அடிகளில், 'இவ்வாறைந்தும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசாலடிகள் அருள மதுரைக் கூலகிரணிகன் சாத்தன் கேட்டனன் இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென் 'அடிகள்' என்று இளங்கோ அழைக்கப்படுவதிலிருந்தும் 'சாத்தன் கேட்டனன் என்று சொல்லப்படுவதிலிருந்தும், இவ்விருவரும் பதிகம் பாடியவர்களல்லர், என்ற முடிவுக்கு நாம் வரலாம். எனவே, பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் மேற்கூறிய மூன்று கருத்துக்களுமே காவியத்தின் நடுநாயகக் கருத்துக்கள் என்று கருதினார் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடியும். இக் கருத்துக்களையே சிலப்பதிகார ஆசிரியரின் கருத்துக்கள் என்று கூறுவர். சான்றுகள் எதுவுமின்றியே அவ்வாறு கூறுகின்றனர். காவிய ஆசிரியரின் நோக்கமென்ன? இம்மூன்று கருத்துக்களை மட்டும் தான் வலியுறுத்த விரும்பி இக்காவியத்தைப் பாடினரா? என்ற வினாக்களுக்கு நாம் விடைகாண முயலுவோம். நூலின் முடிவில் நூற்கட்டுரை என்ற பகுதியில் பதினெட்டு அடிகளில் நூலின் குறிக்கோள் விளக்கப்படுகிறது. அவ்வடிகள் முழுவதையும் கீழே தருவோம்.

89

89