பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழர் வரலாறு கூடலைப் பாராட்டும் ஒரே பாட்டில் "வழுதி கூடல்", சோழர் தலைநகர் உறந்தையையும், "அறங்கெழு நல்லவை உறந்தை", சேரர் தலைநகர் கருவூரையும் "திருமாவியன்நகர் கருவூர்” (அகம் : 93) பாராட்டியுள்ளார். மேலே கூறிய இவர்களையே அல்லாமல், ஊனுர்த் தழும்பன் (அகம் : 227), வேள்பாரி (அகம் : 78), வேம்பி முசுண்டை (அகம் : 24), மூதில் அருமன் (நற் : 367), சிறுகுடிவாணன் (நற்: 340) ஆகிய குறுநிலத்தலைவர்களையும் சிறக்கப் பாராட்டியுள்ளார். தம்முடைய மதுரைக் காஞ்சியில், தலையாலங்கானப் போர் வெற்றியையும் (127-130) இருபெரு வேந்தர்களோடு, வேளிர்களையும் வெற்றி கொண்டதையும் (55-56) பாராட்டிய மாங்குடி மருதனார், அத் தலையாலங்கானப் போரில் வெற்றி கொள்ளப்படாத மிழலைக்கூற்றத்து எவ்வியை வெற்றி கொள்ள, செழியன் மேற்கொண்ட பிறிதொரு போரையும் குறிப்பிட்டுள்ளார் (புறம் : 24). செழியனால் வெற்றி கொள்ளப்பட்டாரைக் குறிப்பிட்ட அவர், அவனால், வெற்றி கொள்ளப்படாது சிறக்க வாழ்ந்த வாட்டாற்று எழினியாதனையும் பாடியுள்ளார். (புறம் :396) அதேபோல் ஆலங்கானத்தில் செழியன் பெற்ற வெற்றிச் சிறப்பைப் பாராட்டவே, அவன் அவை அடைந்து பாராட்டிய கல்லாடனார் (புறம் : 23, 25, அகம் : 209) அப் போரில் தோல்வி கண்டோர் வரிசையில் சேரரும் இடம் பெற்றிருக்கவும், அக்குலத்து வந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், நன்னன் என்பானைக், குடநாட்டில், வாகைப்பெருந்துறையில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்டதைப் பாராட்டியுள்ளார் (அகம் :199). செழியனின் தலையாலங்கானப் போர் வெற்றியைப் பாராட்டிய அதே பாட்டில் (அகம் : 209) தமிழகத்து வடவெல்லை. ஆண்ட புல்லி, கொல்லி ஆண்ட வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி ஆகியோரையும் பாராட்டியுள்ளார். பழந்தமிழ்ப் பாக்கள் உணர்த்தும், அன்றைய அரசியல் நிலைகளால் தெளிவாகும் உண்மைகள் இரண்டு. ஒன்று,