பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 . . தமிழர் வரலாறு களை நயந்து கண்ணுற்றும் மகிழ்வர். (ஈண்டு ஆளப் பட்டிருக்கும் நாடகம் என்ற சொல், சமஸ்கிருத "நாடக" என்ற சொல்லாம், தமிழ்ப்பாக்களில் அச்சொல்லின் முதலாட்சி இது. இது, பெரும்பாலும், சமஸ்கிருத நாடகத் தோடு தொடர்பு கொள்வதற்கு முன்னர்த் தமிழ்நாட்டில் பெரு வழக்கில் இருந்த உரையிலா மெய்ப்பாட்டு நாடகம் ஆதல் கூடும்.) மகளிர், மேனிலை மாடங்களில், நிலவொளியின் இன்பம் காண்பர், கள் உண்டல் விடுத்துக் காமரசம் பருகுவர். பட்டாடை அகற்றிப் பருத்தி ஆடை உடுப்பர்; அக்கோலத்தோடே தம் கணவரைத் தழுவியவாறே உறங்கச் செல்வர். காதல் மயக்கத்தில், கணவர் அணிந்து கொள்ளும் தலைமாலையை மனைவியரும், மனைவியர் சூடிக்கொள்ளும் கழுத்து மாலையைக் கணவரும் மாறி அணிந்துகொள்வர். பகற்போதில், மீன்பிடி படகுகளில் கடல் மேல் சென்ற பரதவர், அந்நள்ளிரவில், கரைக்கண் மாடங்களில் வரிசை வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளில், அவிந்தனபோக, அவியாது பேரொளி காட்டி எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை எண்ணியவாறே கரைநோக்கி மீள்வர். வெண்ணிற மலர்க் கொத்துக்களையும், மடல்களையும் கொண்ட தாழை மண்டிக்கிடக்கும் கடற்கரைக்கண், வணிகப் பெருமக்கள் வாழும், அகன்று நீண்ட தெருக்களில் அமைந்துள்ள, காவல் மிக்க பண்டக சாலைகளில், மேகம், கடலிடத்தே முகந்துகொண்ட நீரை மலையிடத்தே பொழிவதும், மலையிடத்தே பெய்த மழைநீர், கடலில் சென்று சேர்வதும் மாரிக்காலத்தில், மாறி மாறி நிகழ்வது போலக் கடல்வழி வந்து கலங்களிலிருந்து இறக்கப் படுவனவும், நானிலங்களிலிருந்து வந்து நாவாய்களில் ஏற்றப்பட இருப்பனவுமாய பண்டப்பொதிகள் எண்ணிக் காணமாட்டா அளவு குவிந்துகிடக்கும். அப்பண்டங்களுக் கான சுங்க வரியைக் கணக்கிட்டுத் தண்டிக்கொண்டு, அதற்கு அடையாளமாகச் சோழ அரசின் புலிச்சின்னம் பொறிக் கப்படும். அது செய்து அரசன் வருவாயைப் பெருக்கும் கடமையுணர்ச்சியால் புகழ் கொண்டவர்களாகிய சுங்க