பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் - 311 அழைக்கப்படும் ஓரினத்து மக்களைக் குறிக்க வழங்கப் பட்டுளது. வேங்கட மலையைக் குறிப்பிடுங்கால், காட்டுர் கிழார் மகனார் கண்ணனார் என்ற புலவர், அது திரையர்க்கு உரியதாகக் கூறியிருக்கும் நிகழ்ச்சியால், இது உறுதி செய்யப்படுகிறது. ("வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை” - அகம் : 45.9) இளந்திரையன், பெரும் பாணாற்றுப்படையில், பலவேற் படைகளுக்கு உரிய திரையன், "பல்வேல் திரையன்'" (37) என அழைக்கப்பட்டுள்ளான் என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் நலம். அதே காலத்தைச் சேர்ந்த, மற்றொரு புலவராகிய எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார், "மழைமேகங்கள் தழுவிக் கிடப்பதும், புகழ் எல்லைக்கு அப்பாற்பட்டதும், எளிதில் ஏறி அடையலாகா, உயர்ந்த உச்சியினையுடையதும், வெண்னுரை தெரிக்கும் மலையருவிகளைக் கொண்டது மாகிய வேங்கடம், கடும்போர் புரியப் பழக்கப்பட்ட யானைப் படையுடைய தொண்டையர்க்கு உரியது" எனக் கூறியுள்ளார். "வினைநவில் யானை விறல் போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு, ஓங்கு வெள்ளருவி வேங்கடம்". - - - - அகம் : 213 : 1-3. "திரையன்" என்ற சொல் "கடல்", "அலை" எனப் பொருள்படும் "திரை" என்ற சொல்லிலிருந்து மட்டுமே பெறப்படுமாகவே, "ஒருகடலோடி", "கடற்கரை நிலத்தைச் சார்ந்த இனத்தவன்", "அவ்வினத்தலைவன்" என்று மட்டுமே பொருள்படும். திரையர் என்பார், பெரும்பாலும் இன்று செங்கற்பட்டு, பகுதியில் பண்டு வாழ்ந்திருந்த பழங்குடி யினராவர். "தொண்டையர்" என்ற சொல், "தொண்டை" என்ற ஒரு கொடிப் பெயரிலிருந்து பெறப்பட்டதாம். ஆகவே, தொண்டையர் என்பார், தொண்டைக் கொடியைத் தங்கள் சின்னமாகக் கொண்ட, போர் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் போது, அதை அடையாள மாலையாக, அணியும் அரச இனத்தவர் அல்லது பழங்குடியினரைக் குறிப்பதாகும். தொண்டையர், திரையர் என்ற இரண்டுமே, ஒரே