பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 தமிழர் வரலாறு மட்டுமன்று, அப்பாட்டில் வரும் "மாங்குடி மருதன் தலைவனாக" என்று அந்த ஒரு சிறுதொடர் மட்டும் இல்லாமல், இருந்தால் அதைப் பாடியவனை, மூவேந்தர் குலத்தில், எக்குலத்து வந்த எந்த ஒரு பேரரசனாகவும் கொண்டுவிடலாம். அது அவன் பாட்டுதான் என்பதை உறுதி செய்ய மாங்குடி மருதன் பாடிய மதுரைக் காஞ்சியின் துணையினை நாடவேண்டும். அதில் வரும் "பொருப் பிற்பொருந” (40 - 43) “நெடியோன் உம்பல்" (60 - 6) "நற்கொற்கையோர் நசைப் பொருந" (138) என்ற வரிகள் எல்லாம், அப்பாட்டுடைத் தலைவன், பாண்டியர் மரபில் வந்தவன் எனப் பொதுவாகத் தான் உணரத்துணை புரிகின்றன; "இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய" (55) "ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து, அரசுகெட அமர் உழக்கி, முரசு கொண்டு களம் வேட்ட" (127 130) என்ற வரிகள், அப்பாட்டுடைத் தலைவனின் பகையரசர்கள், மூவேந்தருள் பாண்டியர் அல்லாத, சேர, சோழ வேந்தர்களும், வேளிர் சிலருமாவர் என்பதையும், அவன் அவர்களை ஆலங்கானத்துப் போரில் வெற்றி கொண்டான், பகையரசர்களின் முரசினைக் கைக் கொண்டான், களவேள்வி செய்து புகழ் கொண்டான் என்பதையும் உணர்த்துகின்றன என்றாலும், தன்னுடைய பாட்டுடைத் தலைவன் செழியன் என்பதை உணர அது துணை புரியவில்லை ; அதற்கு, அவர் பாடிய, புறநானூற்றுப் பாக்களின் துணை நாட வேண்டியுளது ; அவ்விரு பாக்களில், 24ஆம் எண் பாட்டு, அவன் செழியன் தான் என்பதையும், 26ஆம் பாட்டு, அவன் பெயரை உணர்த்துவதோடு, அவன் களவேள்வி செய்தான் என்பதையும் தான் உணர்த்து கின்றனவே ஒழியப் போர்க்களம், ஆலங்கானம் என்பதையோ, பிற விளக்கங்களையோ தரவில்லை. அவ்விளக்கம் பெறக் கல்லாடனார், துணையினை நாடவேண்டியுளது. அவன் புகழ்பாடும் கல்லாடனார் பாக்கள் இவை.