பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 31 திருவாளர் ஸ்காப் அவர்களின் மறுப்புரை : பெரிபுளூஸ் நூலின் அமெரிக்கப் பதிப்பாசிரியராகிய திருவாளர் ஸ்காப் அவர்கள், திருவாளர் கென்னடி அவர்களின் வாதங்களைப் பின்வருமாறு முடிந்த முடிவாக மறுத்துள்ளார். "எகிப்தியர்களின் கடல் வாணிகப் பயணத்தை, முழுக்க முழுக்க உள்நாட்டு வாணிகமாகக் கருதியும், எபிரேய சமய வழிபாட்டு நூல்களில் அவர் காணும் பழம் பெரும் வாணிகத்தில் இடம் பெற்ற பண்டங்கள், அவ்வாணிகம் நடைபெற்ற வழிகள் பற்றிய எண்ணற்ற குறிப்புகளை, ஏழராவின் (Ezra) வருகையைத் தொடர்ந்து மேற்கொண்ட மறு பதிப்பின் விளைவாம் என முடிவு கட்டியும் எகிப்தியர்களின் பண்டைய கடல் வாணிகப் பயணத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டார். ஏழரா அவர்களின் எபிரேய சமய வழிபாட்டுநூல்களின் மறுபதிப்பு என்ன கூறினும், ஒத்த காலத்தைச் சேர்ந்த எகிப்திய ஆவணங்களில் ஏறத்தாழ அதே வாணிகப் பண்டங்கள்தாம் விளக்கப்பட்டுள்ளன. இந்த உண்மைகள் ஏழராவின் காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய மூலம் வாய்ந்த வணிகப் பண்டங்கள் சோமாலி கடற்கரைக்கும் நைல்நதிக்கு அப்பாற்பட்ட மேட்டு நிலங்களுக்கும் கொண்டு சென்று விற்கப்பட்ட ஒரு வாணிகம் நடைபெற்றதை உணர்த்துகின்றன. இவைபோலும் கருத்துகள் இடைவழியில் பொதுவான சந்திப்புகளில் வணிகப் பண்டங்கள் கைம்மாறுவது நடைபெறாமலே இடையீடின்றித் தொடர்ந்து நடைபெற்ற வணிகப் பயணத்தை யூகிக்கின்றன. ஆனால், நாகரிகவளர்ச்சிபெறா, நனிமிகப் பழைய காலத்திய வாணிகம் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங் குடியினர்க்கும், ஒரு கடல் துறை நகரிலிருந்து பிறிதொரு கடல்துறை நகருக்குமாகவே நடைபெற்றது." - -