பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 401 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் புகழ் பாடுவதாக் கூறப்படும், பத்துப்பாட்டில் ஒன்றாகிய, நெடுநல்வாடையின் ஆசிரியராகிய நக்கீரர், மதுரையில் நிலவிய தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராவர் என்பது ஒரு கட்டுக் கதையே என்பதை உணர்த்துவதாகும் என்பது ஈண்டு, இடையில், குறிப்பிடல் ஆகும். நக்கீரர், சிவனைப் பற்றிப் பாடியுள்ளாராதலின், இக்கட்டுக்கதை சைவர்களால் கட்டிவிடப்பட்டதாகும். இன்றைய எழுத்தாளர் சிலரால், இக்கதை, நெடுஞ்செழியன் தானே அளிக்கும் அகச்சான்றுக் கும் மாறாக, வேதவாக்காகக் கொள்ளப்படுகிறது. இக்காலத்திய கடைசி பாண்டிய மன்னன் : இப்பழைய பாண்டியர் குலத்துக் கடைசி மன்னன், உக்கிரப் பெருவழுதி, அல்லது உக்கிரபாண்டியன் ஆவன். சமஸ்கிருதப் பட்டப்பெயரோடு, பழைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே பாண்டியன் இவன் ஒருவனே என்பது குறிப்பிடல் தகும். ஆகவே, இவனைப் பழைய சோழர்குலத்தில், இராசசூயம் வேட்ட என்ற சமஸ்கிருதப் பட்டத்தைத் தன் பெயரிலே கொண்ட வனின் சமகாலத்தவனாக, நண்பனாகக் கண்டுகொள்வதில் ஏதும் வியப்பு இல்லை. உக்கிர பாண்டியன் புகழுக்கு உரிய ஒரே போர்க்கள நிகழ்ச்சி. வேங்கை மார்பன் என்ற ஒரு குறுநிலத் தலைவனுக்குரிய கானப்பேரெயில் என்ற கோட்டையைக் கைப்பற்றியது மட்டுமே ஒரே ஒரு புறப்பாட்டு (எண் : 21) இவன் புகழ் பாடுகிறது. பழந்தமிழ்ப் புலவர்களில், கடைசி புலவரும், புகழ் பெற்ற பெண்பாற் புலவருமான ஒளவையாரால் பாடப்பெற்ற மற்றொரு புறப்பாட்டு, (எண் : 377) கொளுவின் கூற்றுப்படி, உக்கிரபாண்டியன், பெருநற்கிள்ளி, சேரர் குலத்தலைவன் மாரிவெண்கோ ஆகிய மூவரும் ஒருங்கிருந்தவழிப் பாடப்பட்டதாகும். மூலம், அப்பெயர்களைக் குறிப்பிட வில்லை என்றாலும், கொளுவில் உள்ள செய்தி நம்புதற்குரியது என்றே நான் கருதுகின்றேன்.