பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழர் வரலாறு ஆட்சி, அவர்களின் புறக்காவல் நிலையமாம், ஜனஸ்தானம் இடம் பெற்றிருந்த, கோதாவரித் தென்கரை வரை பரவியிருந்தது எனக் கொள்ளலாம். கோதாவரிக்கு வடக்கில் எண்ணற்ற ஆரிய அரசுகள் நிறுவப்பட்டிருந்தன. ஆனால், விந்தியத்திற்கு அப்பாலும் சென்று, இயக்கர்களும், அரக்கர்களும் மேற்கொள்ளும் திடீர்த் தாக்குதல்களைத் தடுக்கவல்ல பலம் வாய்ந்தவர்களாக, அவர்கள் இல்லை. விசுவாமித்திரரோடு அவர் நடத்தும் வேள்விகளை, அரக்கர்களால் கலைக்கப்படுவதினின்றும் காத்தற் பொருட்டு, இராமன் அப்பகுதிகளுக்கு வருகை தந்த போது, விந்தியத்திற்கு வடபகுதியில் திரிந்து கொண்டிருந்த அரக்கி தாடகை, அவள் மகன் அரக்கனாகிவிட்ட மாரீசன் மற்றும் சுபாகு ஆகியோரோடு அவன் போரிட நேர்ந்தது. இராமர் காலத்தில் இருடிகளின் குடியிருப்புகள், எந்த ஆறு வரை பரவியிருந்தனவோ, அந்தக் கோதாவரி ஆற்றங்கரைக்கு அணித்தாக உள்ள இடங்களில், அவை, இராவணனின் ஆட்சி எல்லைக்கு அணித்தாக இருந்தமையாலும், அவன் துணையைப் பெறலாம் என்பதாலும், எண்ணற்ற அரக்கர்கள் திரிந்துகொண்டிருந்தனர். ஆங்கு, இராவணனின் உடன்பிறப்பாளன், நெடிதுருவம் வாய்ந்த கரன் என்பான், ஆங்கு ஜனஸ்தானத்தில் வாழந்திருந்த ஆரியர்களை வாட்டி வதைத்தான். இராமனைத் தமக்கு அணித்தாக இருந்த காட்டில் சந்தித்த முனிவர்கள், அரக்கர்கள் செய்யும் அட்டுழியங்கள் குறித்துக் கடுந்துயரோடு முறையிட்டுக் கொண்டனர். "ஆரியரல்லாதார், முனிவர்களின் முன் வந்து நிற்கின்றனர். அவர்களின் வழிபாட்டினைப் புனிதம் இழந்த அழுக்குப் பண்டங்களால் கெடுக்கின்றனர்; சிற்றறிவு படைத்த அவர்கள், ஆசிரமங்களில் கடுந்துறவு மேற்கொண்டிருக்கும் முனிவர்களைப் பின்னாலிருந்து தாக்கி அழிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். தெய்வத் தன்மை வாய்ந்த வேள்வித் தீயில் பலி உணவுகளைப் படைக்கும் நிலையில், அந்த யாககலசத்தைத் தூக்கி எறிகின்றனர். தண்ணிர் ஊற்றி வேள்வித் தீயை அணைக்கின்றனர்; பானைகளையும் உடைத்து எறிகின்றனர்."