பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 தமிழர் வரலாறு நன்னன் பற்றிப் பரணர் கூறியன இவை. ஆக, மா மூலனாரும் அவனால் பாடப்பெற்ற பாழிநகர் நன்னனும், பரணரும், அவரால் பாடப்பெற்ற மூவேந்தர்களும் வாழ்ந்த காலத்தவரே அல்லது, திருவாளர் அய்யங்கார் கூற்றுப்படி கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது உறுதியாதல் காண்க. 10) பரணன் : தமிழகத்து வடக்கண் உள்ளதான நல்ல நாட்டைச் சேர்ந்தவன் என மாமூலனாரால் கூறப்பட்ட பரணன் ("வடாஅது, நல்வேல் பாணன் நன்னாடு" (அகம் : 325), தமிழகம் வந்து, கணையன்பால் பயிற்சி பெற்று, வெல்லற்கு அரியவன் எனச் சிறந்து விளங்கிய ஆரியப் பொருநன் என்ற மற்போர் வல்லானை மற்போருக்கு அழைத்து, அவ்வாரியப் பொருநனின், முடிவு போலும் தோள்கள், தன் கையகத்தே அகப்பட்டுக்கிடக்க, உடல் இரு கூறு ஆகிப்போக வெற்றி கொண்ட செய்திகளையும், ("பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி, எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன், நிறைந்திரள் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை" (அகம் : 386) அவ்வெற்றிக் களிப்பால், கட்டி எனும் மற்றுமொரு வட நாட்டு வீரனையும் துணைகொண்டு, தித்தன் வெளியனையும் வெல்லக்கருதி, அத்தித்தனுக்கு உரிய உறந்தை நகரை அணுகிய போது, அந்நகர் எல்லையிலேயே, அத்தித்தன் புகழ்பாடும் இசைப் பேரொலி கேட்டு அஞ்சிப்போரிடும் எண்ணத்தையே கைவிட்டு ஓடிவிட்ட செய்தியையும் (அகம் : 226) பரணர் கூறியுள்ளார். ஆகவே, பாணனும் அப் பாணனைப்பாடிய மாமூலனாரும், பரணர் காலத்தவர் ; அப்பரணரால் பராட்டப் பெறும் மூவேந்தர் காலத்து வாழ்ந்த முதியவர் என்பது இதனாலும் உறுதியாயிற்று. 11) புல்லி : வேங்கட நாடுடையான் ; கள்வர் கோமான்; மழவரை வெற்றி கொண்டவன் ; காட்டில் பிடிகொண்ட களிறுகளின் கோடுகளையும், கள்ளையும் விற்று வாங்கும் நெல் உண்டு வாழும் நல்லவன். புல்லி குறித்து மாமூலனாார் கூறுவது இதுவே. "அண்ணல் யானை வெண்கோடு