பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 465 பாண்டியர்க்குரிய குலப்பெயர் பூண்டும், அவர்க்கு உரிய மரமாம், வேம்பையே தன்னுடைய காவல் மரமாகக் கொண்டும், வாழ்ந்திருந்த பழையன் மீது சினங்கொண்ட செங்குட்டுவன், அம்மோகூர் மீது படையெடுத்துச்சென்று, பழையனை வென்று, அவன் காவல் மரமாம் வேம்பையும் வெட்டி வீழ்த்தித் துண்டுகளாக்கினான். இச்செயலைச், செங்குட்டுவன் அவைக்களப் புலவராம், பரணர் "மோகூர் மன்னன் முரசும் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடித்து" (பதிற்று : 4) என்றும், செங்குட்டுவன் உடன்பிறப்பு இளங்கோ அடிகளார் “பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு, வேம்பு முதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய" (சிலம்பு : 27 : 124 - 126) என்றும் பாராட்டியுள்ளனர். இவ்வாறு முடியுடைய மூவேந்தர்களைப் பாடிய நக்கீரரும், பரணரும் பாடிய மோகூர் மன்னன் பழையன், தமிழகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்தோடு நெடிய பெரிய தேர்ப்படைகளைக் கொண்ட மோரியர் என்ற கங்கைக் கரைப் பேரரசராம் மோரியர், தம் தேர்ப்படை இனிதே செல்ல, இடையில் தடையாக இருந்த மலைகளை யெல்லாம் வெட்டி வழிசெய்து கொண்டு, தமிழகத்துள் புகுந்து விட்டாராகத் தன் கோசர் படைத்துணையோடு அவர்களை வெற்றிக்கொண்டு, தன் மோகூரைத் தாண்டி அப்பாற் செல்லாவாறு துரத்திவிட்ட அருஞ்செயலை மாமூலனார் பாராட்டியுள்ளார். "கோசர் தொன்மு தாலத்து அரும்பனைப் பொதியில் இன்னிசை முரசும் கடுப்பு இகுத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலைவந்த மாகெழு தானை வம்ப மோரியர்" - அகம் : 251. ஆக, நக்கீரரும், பரணரும் பாடிய மோகூர்ப் பழையனும், அவனைப்பாடிய மாமூலனாரும், அம்முதுபெரும் புலவர்