பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 தமிழர் வரலாறு களும், அப்புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற நெடுஞ் செழியன், செங்குட்டுவன் போலும் மூவேந்தர்களும் வாழ்ந்த காலத்தவரே அல்லது, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட காலத்தவர் அல்லர். ஆக, மாமூலனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதற்குத் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் காட்டிய இரண்டாவது காரணமாம், மாமூலனார் பாடிய எண்ணற்ற குறுநிலத் தலைவர்கள் எல்லாம், மூவேந்தர் ஆட்சி மறைவுக்குப் பின்னர், அதாவது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்த், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு அரசோச்சத் தொடங்கியவர்களாவர் என்ற வாதத்தில் வலுவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகிவிட்டது. இனி, மாமூலனார் மூவேந்தர் வழி வந்தார் எவரையும் பாடவில்லை என்ற அய்யங்காரின் முதல் காரணத்திலாவது உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்வாம். மாமூலனார், தமிழகம் மூவேந்தர் ஆட்சிக் கீழ் முழுமையாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்தாம். அதனால் தான், தமிழகத்துக்கு அப்பாற்பட்ட, வேற்றுமொழி வழங்கும் நாட்டைக் குறிப்பிடும் போது, "தமிழ் கெழு மூவர்காக்கும் மொழிபெயர் தேளம்" (அகம் : 31) எனக்குறிப்பிட முடிந்தது. இவ்வாறு பொது வகையால் கூறியதோடு அமையாது. தன்நாட்டு எல்லையை விரிவுபடுத்தி, மறைந்த தன் முன்னோர் நினைவாகப் பெருஞ்சோறு அளித்துக் கடம்பரை வென்று, இமயத்தே வில் பொறித்து அக்காரணங்களால், பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என அழைக்கப் பெற்ற சேரர் குலம் பெருவேந்தன் ஒருவனைப் பாராட்டியுள்ளார். "நாடுகண் அகற்றிய உதயஞ்சேரல்" - அகம் : 65. "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியம் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை" அகம் : 233,