பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும தென் இந்தியாவும்

101

 காலத்தில் இல்லை என்பதற்கு, அக்காலத்திய நிகழ்ச்சிகளைக் கூறும் வால்மீகியால், அக்காலத்திய நிகழ்க்சிகளோடு இணைத்து இராமாயணத்தில் கூறப்படாதிருப்பதைச் சான்றாகக் கொள்ளும் திருவாளர் பி. டி. சீனிவாச அய்ப்யங்கார் அவர்கள், ஒரு பொருளை அல்லது ஒரு செய்தியை, அல்லது ஒர் இனத்தை, வால்மீகி தம்முடைய இராமாயணத்தில் குறிப்பிட்டுவிட்டதினாலேயே, அவை, வால்மீகி காலத்தில், இராமாயண காலத்தில் இருந்தன. என்பதை ஏற்றுக் கொள்கிறாரா என்றால் இல்லை. வால்மீகி இராமாயணத்தில் அவை குறிப்பிடப்பட்டுவிட்ட நிலையில் அவை, அக்காலத்தில் இடம் பெற்றிருந்தன என்பதை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, வால்மீகத்தில், அவை, இடம் பெற்றுவிட்டமையினாலேயே, அவை இராமர் காலத்தவை ஆகிவிடா. அவை, இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாலும், அவற்றைக் குறிப்பிட்டவர் இராமர் காலத்து வால்மீகி அல்லர்; அவருக்குப் பல நூறு ஆண்டுக் காலம் கழித்து வாழ்ந்த, வேறு ஒரு வால்மீகி ஆவர். ஆகவே, அவை இராமர் காலத்தைச் சேர்ந்தன ஆகா எனத் தம் வாதத்தை வேறு கோணத்தில் எடுத்து வைத்து விடுவர்.

சீதையைத் தேடித் தென்னாடு செல்லும் வானரத் தலைவனுக்கு, அத்திக்கில் அவன் காணலாம் இடங்களை நிரலே எடுத்துக் கூறும் சுக்ரீவன், காவிரிப் பேராற்றையடுத்து மலையக் குன்றின் முகட்டில் வீற்றிருக்கும் அகஸ்தியரைக் காண்பீர்கள் எனக் கூறியதாக, இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவும், இராமர் காலத்தில், அகஸ்தியர் காவிரிக்கரைப் பொதிகை மலையை அடையவில்லை. அவர் கோதாவரிக்கரை பஞ்சவடியிலேதான் நிலைகொண்டிருந்தார். அவரை, எப்படி இராவணன், சீதையை வான வீதி வழியே கொண்டுசென்று இலங்கையில் சிறை வைத்துவிட்டானோ, அதேபோல், பஞ்சவடியில் இருக்கும் அகஸ்தியரைப் பொதிகைக்குன்றின் முகட்டில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் நிகழ்ச்சி இராமர் காலத்து வால்மீகியார் செயல் அன்று. இராமர் காலத்து அகஸ்தியருக்குப் பின்னர், தென்னாட்டில்