பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழர் வரலாறு

வெறும் மரபுகளாக இல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளாக இருந்த, உதாரணத்திற்குப், புலவன், காதல் பிறப்பதை, மலைநாட்டுக்கு உரியதாக, பா மரபுக்காகக் கற்பித்துக் கூறாமல், தன்னுடைய பாக்களில் ஐந்து இயற்கை நிலக் கூறுகளின் உண்மை வாழ்க்கை நிலைகளை, உள்ளது உள்ளவாறே எதிரொலித்த வேறு ஒரு இலக்கியம் இருந்திருக்கு வேண்டும். அந்த மிகத் தொலை நாட்களில், காதலர்களின் தற்காலப் பிரிவு, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய நிலங்களுக்கு உரியதாக மரபுக்காக ஏற்றிப் பாடாமல், அந் நிலங்களில் வாழ்ந்து அந்நிலங்களைப் பாடிய புலவன், அந்நிலம் ஒவ்வொன்றிலும், தான் கண்ணெதிரில் கண்ட, காதலர்கள் பிரிவால் நேரும் கருத்துரையை விளக்கிக் கூறினான். தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாய்க் கொண்ட மரபுவழிப்பாடல்களுக்கு முற்பட்டதான, இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு, ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது. மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளாகா. இவ் வகையில் தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால எல்லையாக, ஏறத்தாழ கி. மு. 1000 ஐ அடைகிறோம். இவ்வகைப் பாக்களின் வளர்ச்சிக்கு வழி செய்து, அப்பாக்களில் எதிர் ஒளி காட்டும் நாகரீகம் வளர்ச்சி பெறுவதற்குப் பலநூறு ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்; ஆகவே, தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்தை, அவர்கள், கிறித்துவுக்குச், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்க வேண்டும் என முடிவு கொள்ளலாம்.

பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத் தலைவர்கள் :-

பாவாணர்கள், பண்டைக்காலம் தொட்டே, பரிசில் பெறும் நோக்கோடுதான் பாடினார்கள். ஆகவே, அவர்களுடைய பாட்டுடைத் தலைவர்களெல்லாம், பழங்குடி இனத் தலைவர்களே. போர் இத் தலைவர்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நிகழ்ச்சிகளின் போது மட்டுமே, ஆற்றல்மிகு அருஞ்செயல் ஆற்றும் வாய்ப்பு,