பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழர் வரலாறு

இவ்விரு செய்யுட்களும், நாம் ஆய்வு செய்துகொண்டிருக்கும் காலத்திலும், பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன. ஆனால், அவை, உண்மையில், மிகமிகப் பழைய காலத்தில் நிலவியிருந்த திருமணச்சடங்கு முறைகளையே விளக்குகின்றன.

திருமண வாழ்க்கை இவ்வாறு, நல்ல நிமித்தத்தில் தொடங்கினாலும் பெரும்பாலும், ஒரே சீரான வழியில் ஒடியதில்லை. மண வாழ்க்கையில், உண்மையாக நடந்து கொள்வதிலிருந்து, கணவன்மார்களைத் தவறான வழிக்குத் தூண்டிவிடும் பரத்தையரின் சூழ்ச்சிகளால், கற்புக் காலத்து அன்பு வாழ்க்கை, தற்காலிக, அல்லது நிரந்தர முடிவுக்குப், பல சமயம் ஆளாக்கப்பட்டுவிடும். வயல்களில் கதிர் முற்றிக் கொண்டிருக்கும் காலத்திலும், அறுவடைக்குப் பின்னர், நிலம் தரிசாக விடப்பட்டிருக்கும் காலத்திலும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஒய்வு நாட்களில், வேலையற்றுக் கிடக்கும் கைகளுக்குச் சில குறும்புகளைக் கொடுத்து விடுகிறது சைத்தான். ஆகவே, விளைநிலப்பகுதிக்கு மட்டுமே தனி உரிமை வாய்ந்த ஒன்று, பரத்தையர் ஒழுக்கமுறை. கோடையில் நீர் வேட்கை மிகுந்து நிலங்களெல்லாம் திணறும்போது, மழை மேகங்களை, இடியேறு (முருகனின் பழைய வேற் படை போலும், கல்லால் ஆன, படைக்கலம்) எனும் படைக் கலத்தால் பிளந்து, மழை பெய்யப்பண்ணும் காாமேகத்தை ஆட்சி கொள்ளும் கடவுள், இந் நிலத்தின் தெய்வமாம். தன்னை வழிபடும் நிலஉலக ஆடவர், அந்நில உலகப் பரத்தையர்களால் சூழப்பட்டிருப்பது போலவே, இவனும், வானுலகப் பரத்தையர் குழாத்தால் சூழப்பட்டிருக்கும் ஒரு காமக் கடவுளாவன். பொங்கல் என அழைக்கப்படும், பருப்போடு கலந்து ஆக்கிய சோறு, இவன் மிகவும் விரும்பும் படையல். விளைநிலப் பகுதிகளில், அறுவடை விழாவாக, மக்களால், இன்றும் பெரிதும் பாராட்டப் பெறும் விருந்துப் பெருவிழா இது.

கடைசி நிலப்பகுதி, கொள்ளைக்காரர்களின் வாழிடமாம் பாலை. அடுத்துள்ள மலை நிலத்தைப் போலவே, தாயைக்