பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரம் : VII

கி. மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில்

வெளிநாட்டு வாணிகம்.

வெளிநாட்டு வாணிக வளர்ச்சி :

சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளைக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. [CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5 : 18: 584: 5 , 18 : 321] மகாபாரத காலத்தில், வடஇந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக், குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது எதுவுமில்லை. இஃது உண்மையோ அல்லவோ, ஆனால் ஒருபக்கம் தென்னிந்தியா, மறுபக்கம் பாபிலோனியா, அரேபியா, ஆப்பிரிக்க நாடுகள், ஆகிய இவற்றினிடையே, வேதகாலத்தில் நிலைபெற்றிருந்த வாணிக உறவு, கி. மு. இரண்டாயிரத்தில் செழிப்புற வளர்த்திருந்தது என்பதை உணர்த்த சில அகச்சான்றுகள் உள. வடமேற்கு ஐரோப்பாவின் வடகோடியின் பாலை நிலங்களாம் ஸ்காண்டினேவியாவைச் சார்ந்த, நெட்டையான உருவமும், நெடிய மண்டை ஒடும் கொண்ட வெள்ளைநிறத்துப் பழங்குடியினர் (Nordic Tribe) உரிய தமிழ்ப்பெயரில் கூறுவதனால், வடகோடி நெடிய முல்லைநிலத்து ஆயர் கி. மு. 2000இல், மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து, கோதான் முதல் கிழக்கு மத்திய தரைக் கடற்கரை வரையான, பண்டை நிலவழிவாணிகத்தை அழித்து விட்டு, சீனாவுக்கும் மிகப்பழைய நகரங்களுள் ஒன்றான டிராய் (Troy) நகருக்கும் இடையில் நடைபெற்று வந்த, பச்சை மாணிக்கம் (Jafe-Stone) வாணிகத்தைத் துண்டித்துவிட்டனர்.