பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப்பாக்கள்

235.


முழுக்க முழுக்க மருதமாகவே (விளை நிலமாகவே) இருக்கும் சோழநாடு போலவோ, பெரும்பகுதி குறிஞ்சியாக (மலை நாடாக) இருக்கும் சேர நாடு போலவோ அல்லாமல், பாண்டிய நாடு, ஐந்திணைக்காதல் பாடல்களும், அவை ஒவ்வொன்றொடும் உறவுடையவாய, ஐந்திணைப் போர்ப் பாடல்களும் எழுவதற்கு ஏற்புடைய, ஐந்திணைக்கும் உரிய வாழிடங்களைக் கொண்டிருந்தது. ஆகவே, தமிழிலக்கிய வளர்ச்சியின் நடுவிடமாக, இலக்கிய நடைத் தமிழ், அதாவது செந்தமிழ் வழங்கும் இடமாக, மதுரை சிறந்து உயர்ந்தது. வியப்புக்கு உரியதன்று. செந்தமிழ் நாட்டை அடுத்திருந்த, அவ்வந்நிலத்துக்கே உரிய கிளைமொழிகள் வழக்கில் இருந்த பன்னிரண்டு மாவட்டங்கள் குறித்துத் தமிழ் இல்க்கணங்கள் குறிப்பிடுகின்றன. ["செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்" , தொல்காப்பியம் : சொல்லதிகாரம் : 9 : 3] நன்கு தெரிந்த, ஒரு தமிழ்ப்பாட்டு, அச் செந்தமிழ் வழங்கும் பன்னிரு. நாட்டையும், தென் பாண்டி, குட்டம், குடம், கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவட தலை நாடு, சீத நாடு, மலையமா நாடு, சோழ நாடு என வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

"தென் பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி,
பன்றி, அருவா, அதன் வடக்கு நன்றாய
சீதம், மலாடு, புனல்நாடு, செந்தமிழ்சேர்
ஏதம்இல் பன்னிரு நாட்டு எண்"

தொல்காப்பிய உரையாசிரியராய சேனாவரையர், தென் கிழக்கிலிருந்து வரிசைப்படுத்தத்தொடங்கி, பொங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, இறுதியாக அருவாவட்தலை நாடு என முடிக்கிறார். இறுதியாகக் கூறப்பட்டது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்த், தொண்டைநாடு என்றும், வடஇந்திய எழுத்தாளர்களால் திராவிடம் என்றும் அழைக்கப்பட்ட நாடாகும்.