பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தமிழர் வரலாறு

ஆக, இறையனார் அகப்பொருளுக்கு உரைக்கப்பட்ட உரைகளுள் ஏற்புடைய உரை எது என்பதை மதிப்பீடு செய்த அந்த ஊமைப்பிள்ளை, தன் தொகை நூல் பாடல்களை வரிசைப்படுத்தும்போது, ஒருசீராக எண்ணும் அறிவும் கொண்டிருந்தான் போலும்!

குறுந்தொகையும் நற்றிணையும் :

குறுந்தொகையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள், நான்கடி முதல் எட்டடி வரையானவையாகவும், நற்றிணையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள், ஒன்பது முதல் பன்னிரண்டு. அடிவரையானவையாகவும். உள்ளன என்பது ஒன்றினாலேயே அகநானூற்றிலிருந்து இவை வேறுபடுகின்றன. இம்மூன்று தொகை நூல்களையும், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட, அவற்றின் பாக்களின் கருப்பொருளில் எதுவும் இல்லை. எல்லாப் பாக்களுமே, களவு கற்பு, என்ற இருநிலைக் காதல்களையும் கூறுகின்றன. அரசர்கள், குறுநில மன்னர்களைக் குறிப்பிடுகின்றன. தமிழர் கொள்கைகள், வாழ்க்கை அமைப்புகள் பற்றிய குறிப்புகள் நிறையக் கொண்டிருந்தாலும், ஆரியக் கடவுள்கள் ஆரிய நம்பிக்கைகளை அருகியே குறிப்பிடுகின்றன. ஐந்திணைப் பாடல்களைத் தொகுத்ததில், இவ்விரண்டிலும் எந்தவிதமான வரிசை முறையும் மேற் கொள்ளப்படவில்லை. நற்றிணை, பன்னாடு தந்த மாறன் வழுதி ஆணையாலும், குறுந்தொகை, பூரிக்கோ ஆணையாலும் தொகுக்கப்பெற்றன. இருவருமே, பெரும்பாலும் ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த அரசர்களாவர்.

புறநானூறு :

புறநானூற்றுப் பாடல்கள் நானூறும், யாருடைய ஆணையின் கீழ், யாரால் தொகுக்கப்பெற்றள என்பது அறியப்படவில்லை. மற்ற தொகை நூல்களோடு பல வழிகளில் வேறுபடுகின்றன. முதலாவது, அவை, அரசர்கள், குறுநில மன்னர்களின் போர்ச் செயல்கள், தங்களைப் பாடிய, புலவர் பாணர் போன்றார்க்கு அவர்கள் வழங்கிய,