பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதிகாரம் : X11


தமிழர் வாழ்க்கை:
கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

மலைநாட்டில் காதல் :

கி.மு. 500 முதல் கி.பி. 1 வரையான இக்கால கட்டத்தில் தமிழ் அரசர்கள், அரசுகள் பற்றி, வட இந்தியாவிலும் சிலோனிலும் உள்ள, பாலி அல்லது சமஸ்கிருத இலக்கியங்களில் கிடைக்கக் கூடிய குறிப்புகள் அனைத்தும், முந்திய இரு அதிகாரங்களில் எடுத்துக் கூறப்பட்டன. இந்த ஐந்நூறு ஆண்டுகளில், எண்ணற்ற தமிழிலக்கியங்கள் பாடப்பட்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பி ன் வ ரு ம் ஒர் அதிகாரத்தில் குறிப்பிட இருப்பது போல், தமிழ்மொழி குறித்த, வியத்தகு நிலையிலான நனி மிகப் பொருந்தும் இலக்கணங்களை அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இயற்றியிருக்க இயலாது. அந்த இலக்கியங்கள் அறவே அழிந்து போயினவாக நம்பப்படுகிறது. என்றாலும், இப்போதுள்ள தொகைநூல்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சில, அக்காலத்தைச் சேர்ந்தனவாதல் கூடும் என நான் எண்ணுகின்றேன், அவற்றுள் ஒருசில, பாடினோர் பெயர் அறியமாட்டா நிலையின. இதற்குக் காரணம், அவை நனி -மிகப் புழங்காலத்தைச் சேர்த்தனவாதலின், தொகை நூல்களில், அவை வரிசைப்படுத்திய காலத்தில், அவற்றைப் பாடியவர் பெயர் மறந்திருக்கக் கூடும். மேலும், அவற்றில் சமஸ்கிருதச் சொற்கள் இடம் பெறா நிலையால் அவை, தனிச் சிறப்புடையவாக மதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்கள். முழுக்க முழுக்கத் தமிழர்க்கே உரியவாம். ஆரியக் கருத்துக்கள் பற்றிய குறிப்பு அவற்றில் அறவே இடம் பெறவேயில்லை. கிடைக்கும்.