பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தமிழர் வரலாறு

கூறும் நீ, கூறியவாறே நடந்து மணந்துகொள்வதே. இவள் உயிரைக் காக்கும் வழியாம் என்பதை மட்டும் கூறியதை மறுத்து மயங்குகின்றனை; இதை நான் யாரிடம் சென்று முறையிடுவேன்?’’

‘’பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத்,
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு:அணி நன்னாள்
பொன்னின் அன்ன பூஞ்சினை நுழை இக்
கமழ்தாது. ஆடிய கவின்பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம்கொள்பு ஞாயிற்று
உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன்
நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய்
யார்க்கு நொந்துரைக்கோ யானே! பன்னாள்
காமர் நனிசொல் சொல்லி
ஏமம் என்று அருளாய், நீமயங் கினையே‘’

-நற்றிணை : 396.

இப்பாக்கள், மலைநாட்டுக்குரியதான, மணத்திற்கு முந்தியதான களவுக் காதல் பற்றியனவாம். குறிஞ்சித் திணைக்கு உரியவாம்.

முல்லையில் காதலர் :

காடு சார்ந்த நிலத்து மக்கள் ஒழுக்கமாகிய முல்லைத் திணை, சிறு பிரிவின் துயர் ஆற்றமாட்டாது வருந்தி, இருத்தலைக் குறிப்பதாகும். போர் முடிந்து மீளும் காதலன், தேர்ப்பாகனிடம் பின் வருமாறு கூறுகிறான்: "நம் அரசனும் செய்தற்கரிய போரை முடித்துக்கொண்டான். மலைச் சுனைகளில், மகளிர் கண்போல் ஒளிவிடும் குவளைகள் மலர்ந்துவிட்டன. பரந்து அகன்ற காடெங்கும் வேங்கை, தன் மலர்களை உதிர்க்கலாயின. இம்மெனும் ஒலி எழ, வண்டுகள் எத்திசையும் பறக்கலாயின. பேரூர்களின் அகன்று