பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

257

பூமலர் பொதும்பர் நாண்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே.
- குறுந்தொகை : 381


பிரிவுத் துயர் பொறாது துயர் உறும் ஓர் இளமகளை, அவள் தோழி தேற்றும் முறை இது: “தோழி! சுரத்தின்கண் உள்ள இலுப்பை மரத்தின் வெண்ணிறப் பூப்போலும் மெத்தென்ற தலையை உடைய இறால் மீன்களுடன், திரளாகக் கிடைக்கும் பிற மீன்களையும் அகப்படுத்திக்கொள்ளுமாறு பின்னி விரித்த வலைகளை உடைய பரதவர்களின், வண்மைமிக்க தொழிலில் வல்லவர்களாகிய சிறுவர்கள், காட்டில் மரங்களில் ஏறி நின்று மானினங்களை வெருட்ட விரும்பி விரைந்து: செல்லும் வேட்டுவச் சிறார்களைப் போல, மீன்பிடி படகில் ஏறிக்கொண்டு, கடல்பரப்பில் நெடுந்தொலைவு சென்று மரங்களை ஈர்த்துப் பிளக்கும் வாள் போலும் வாயையுடைய சுறா மீன்களுடன், பிற பெரிய மீனினங்களையும் பிடித்து, அவற்றைத் துண்டித்த இறைச்சிகள் நிரப்பிய தோணிகளோடு, மீண்டுவந்து, கடற்காற்று சுழன்று அடிந்துக் குவித்த மணல் பரப்பில் இறங்கும் உப்பங்கழி சூழ்ந்த நம் பாக்கத்தில், கல்லென ஆரவாரம் எழ, நம் தலைவன் தேர்வந்து நிற்கும். இது உறுதி; ஆகவே, நீ வருந்தாதே”:

“அத்த இலுப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்,
மரன்மேற் கொண்டு மான்கனம் தகைமார்
வெந்திறல் இளையர் வேட்டெழுந் தாங்குத்
திமில்மேல் கொண்டு திரைச்சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி
நினம் பெய் தோணியர் இடுமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே, தோழி கொண்கன் தேரே”.
- நற்றிணை , 111

த. வ.-17 .