பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

தமிழர் வரலாறு

பிரிவால் வருந்தும் காதலர்களோடு, கடற்கரை கொண்டிருக்கும் இம்மரபுத் தொடர்பை விளக்கும் புலவர்கள், அதே நிலையில், அக்கடற்கரைவாழ் மீனவர்கள், அவர்தம் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை விளக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பாலையில் பெரும் பிரிவு :

பாலை எனப்படும் ஒருவகைப் பாட்டில், ஒன்று. காடுகளுக்கும் அப்பாற்பட்ட தொலை நாடுகளுக்கும் காதலன் சென்றுவிட்டதைக் கூறும். அல்லது, காதலனோடு அவனுரர் சென்றுவிட்ட மகளின் தாய், செவிலி போன்றோரின் துயரைக் கூறும். முன்னதற்கான ஒர் எடுத்துக்காட்டு இது. “வாயிற் கண் வந்து நின்று இரப்பவர்க்கு அவர் விரும்புவன கொடுத்து அவர் இன்மையைப் போக்க வேண்டியது இல்லறத்தார் கடன்; அது செய்ய மாட்டா நிலையுற்ற நமது தலைவர், என் கண்ணையும், தோளையும், தண்ணெனக் குளிர்ந்து மணம் நாறும் கூந்தலையும், திதலை படர்ந்த அழகிய அல்குலையும் பலவாறு புகழ்ந்தபடி, நேற்றும் இங்கேயே இருந்தார். இன்று அவரைக் காணோம். பெரிய நீர்ப்பரப்பு போல் காணப்படும் கானல் நீராம் பேய்த்தேரை, மரங்களே இல்லாமல் நீண்ட அப்பொட்டல் காட்டில், மான் கூட்டம் நீரென்று மயங்கி, அது நோக்கி விரையும் கொடுமைமிக்க, மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில், மத்திட்டுக் கலக்கிய காலத்து, வெப்பத்தால் கைகூடாது சிதறிக்கிடக்கும் வெண்ணெய் போல, உப்புப் பூத்துக் கிடக்கும் களர் நிலத்தில் ஒமை மரங்கள் மட்டுமே நெருங்க வளர்ந்து கிடக்கும் காட்டில், வெயில் நிலைபெற்று நிற்பதால் வெம்மை மிக்க பாலை நிலத்தில் தனியாகச் சென்றுகொண்டிருப்பார் என அண்மையில் உள்ள அயலார் கூறுகின்றனர். நான் இக்கொடுமையை எங்ஙனம் ஆற்றுவேன்?”

“கண்ணும், தோளும், தண்ணறும் கதுப்பும்

திதலை அல்குலும் பலபா ராட்டி,