பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தமிழர் வரலாறு

‘’தேன்கலந்து மிகுசுவை உடையதாக ஆக்கிய இனிய வெண்ணிறம் கெடாப் பால் உணவை, சிறந்த ஒளிவீசும் பொன்னால் பண்ணப்பட்ட கிண்ணத்தில் இட்டு, அக்கிண்ணத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு, மலர் நிறைந்த பூங்கொடிபோலும், மெல்லியகொம்பை மறு கையில் ஒக்கியவாறே அணுகி, 'இப்பாலை உண்ணுவாயாக’ எனக் கூறலும், தெள்ளத் தெளிந்த முத்துக்களைப் பரலாக இட்டுப் பண்ணப்பட்ட பொற்சிலம்பு காலிலிருந்து ஒலிக்கப் பாய்ந்து, மெல்ல நரைக்கத் தொடங்குமளவு, அறிவாலும் ஆண்டாலும் முதிர்ந்த செவிலித்தாய் பின் தொடர்ந்து வந்து பற்றிக் கொள்ள மாட்டாது தளர்ந்து போகுமாறு ஓடி, மனை முன்றிலில் உள்ள மலர்ப்பந்தற் கீழ்ப் போய் நின்றுகொண்டு, "உண்ணேன் , உணவு வேண்டேன்’ என மறுத்து உரையாடும் சிறிய விளையாட்டுப் பருவத்தாள் என் மகள்'‘

‘’பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்ப, தெண்ணீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந்துஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி’’:

- -நற்றிணை: 110 : 1-8

மலைகளைச் செய்துவைத்ததுபோல் காட்சி அளிக்கும் அடி பரந்து மிக உயர்ந்த, நெல் நிறைந்திருக்கும் பலகூடுகளையுடைய, ஏர்களில் எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழவ! மறுநாள் நடைபெற வேண்டிய உழவுப் பணிகள் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து விட்டமையால் கண்ணுறக்கம் கொள்ளாமல் இருந்து, குளிர்ந்த விடியற்போதிலேயே எழுந்து கொண்டு, கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரியபெரிய துண்டுகள் மிதக்குமாறு பண்ணிவைத்திருக்கும் குழம்போடு