பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

5

முடிவிற்கு அடிப்படை ஆதாரமாக, உண்மையில், நான் மேற்கொண்ட நனிமிகப்பழைய நூல், தொல்காப்பியப் பொருளதிகாரம் ஆகும். அந்நூல், அது எழு'”தப்படுவதற்கு முந்தித் தோன்றிய இலக்கியங்களுக்கான இலக்கண மரபுகளை நேரிதாக எடுத்து விளக்கவே எண்ணியுளது. அவ்விலக்கண மரபுகளை அந்நூல் எழுந்த காலத்திற்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்களின் உண்மையான பழக்க வழக்கங்களாகவே நான் மதிக்கின்றேன். பண்டைத் தமிழரின் எண்ணித் தொலையா இலக்கியப்படைப்புகளின் ஒருசிறு பகுதியாய் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற தலைப்புகளில் தொகை நூற்களில் தொகுக்கப்பெற்றிருக்கும், வேறுவேறுபட்ட நூற்றாண்டுகளில் எழுதப்பட்டனவாய அப் பாக்கள் பலவும் தரும், வரலாற்றுச்சான்றுகளே தெளிவான, உறுதிவாய்ந்த நேரிடைக்கூற்றுகளாகும். இச்செய்யுள்கள், இருபெரும் அறிஞர்பெருமக்களால் இதற்கு முன்பே வரலாற்று ஆய்வுக்கும் ஓர் அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல்லேருழவு செய்யப்படாமல் வெற்றுக்கரம்பாகவே இருந்துவந்த, தமிழிலக்கியத்திறன் ஆய்வு, என்ற மண்ணில், திருவாளர் வி. கனகசபை அவர்கள் முதல் உழவு செய்து, பண்டைய தமிழரசர்களின் வரலாறு பற்றிய ஆய்வினை முதன்மையாகவும், அக்கால மக்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வினை இடைப்பிறவரலாகவும் மேற்கொள்ளும், “1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்” என்ற தம்முடைய நூலைக் கொணர்ந்துள்ளார். முதுபெரும் தமிழ் அறிஞராக அவர் இருந்தும், பழந்தமிழ் இலக்கியங்களில் பெரும்பகுதி அவர் காலத்தில் அச்சிடப்படாமையால் அத்துறையில், முழுமையாக வெற்றிகாணமாட்டா இயலாமையால் அவர் வருந்தினார். அதனால், நம்புதற்கியலா வரலாற்றுக் கட்டுக்கதைகள் சில இடம் பெற்றுவிடத்தக்க, பல தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்க நேர்ந்துவிட்டது. சென்னைப்பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார்