பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழர் வரலாறு

அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத்தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித்துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித், தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார். ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கை முறை பற்றிய செய்திகளை நூற்றாண்டுவாரியாகப் பெருமளவில் கொண்டிருப்பனவாகவும் (அப்பழங்காலச்சமுதாய வாழ்வியல் முறை பற்றிய) வரலாற்றுச் செய்திகளையோ அதன் வளர்ச்சி நிலை பற்றிய ஆய்வினையோ அவர் மேற்கொண்டாரில்லை. உண்மையில் அவ்விலக்கியங்களில் இரண்டறக் கலந்துகிடக்கும் இத்துணைச் செல்வங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என எண்ணிக் கலக்கப்படுமளவான வரலாற்றுச் செல்வங்கள் மிகப்பலவாம். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து மட்டும் கல்லி எடுக்கலாம் வரலாற்றுச் செய்திகளில், ஒரு கால் கூறினைக் கூட நான் பயன்படுத்தவில்லை என்றே நான் அஞ்சுகின்றேன். வரலாற்றுச் செய்திகளாக, ஆய்ந்து கண்டு நான் கூறியிருப்பன பெரும்பாலும் முழுக்க முழுக்கப் புதிய செய்திகளாகவே, என்னுடைய ஒவ்வொரு முடிவையும் அரண் செய்யும் சான்றாகத் தமிழ் இலக்கியத்தில் காணலாம் செய்திகளை அவற்றின் மூலவடிவிலேயே தருவதை, ஒவ்வொரு அதிகாரத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்கொண்டுவிடும் வகையில் அளித்திருப்பதன் மூலம், என் நூலைப், படிக்கும் தமிழ் அறியாதவர்களை அலைக்கழிக்க அல்லற்படச் செய்து முந்திய எழுத்தாளர்கள் செய்யாதுவிட்ட ஒன்றை நான் செய்துள்ளேன்.

இந்நூலுக்காக நான் மொழி பெயர்த்திருக்கும் தமிழ் இலக்கிய மேற்கோள்பாக்கள் பழஞ்சொற்களையும், வழக்கிறந்துபோன இலக்கண மரபுகளையும் பெருமளவில் கொண்டுள்ளன என்பதைக் கூறவேண்டியது பெரும்பாலும் தேவையற்றது. மூலங்களுக்கு உரை வகுக்கும் நிலையில் உரையாசிரியர்களும் சிற்சில இடங்களில் மிகமிக அரிதாக என்றாலும் வழிதவறிச் சென்றிருப்பதால், அவர்கள் உரை, தவறான