பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

தமிழர் வரலாறு

அவ்வகையில், காதல் நிகழ்ச்சிகளில் பெருந்துணை புரிபவர்களாகப் பிராமணர்கள் ஆளப்படுவதை, ஆழ்ந்து முடிவு செய்துள்ளார். இது, சமஸ்கிருத நாடகத்தின் ஒரு மரபு ஆகும். அகநானூற்றிலோ, அல்லது புறநானுற்றிலோ, அத்தகைய குறிப்பு எதையும் காண முடியவில்லையாதலின் தொல்காப்பியனார், அதை ஒரு கொள்கையளவில் கூறியுள்ளாரேயல்லது, ஒர் உண்மை நிகழ்ச்சியாகக் கூறவில்லை என்றே, நான் எடுத்துக் கொள்கிறேன், புறநானூற்றில், பார்ப்பார் என்ற சொல், நான்கு முறை. இடம்பெறுகிறது : அந்தணர் மற்றும் அவர்தம் புலமை பற்றி, மேலும் எட்டுக் குறிப்புகள் உள்ளன.

“ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்”
- புறம் : 9 : 1.


“பார்ப்பார்த் தப்பிய கொடுமை”
-புறம் : 34 : 3.


“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”
- புறம் : 367 : 4 - 5.


“அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீவிளக்கு” - புறம் : 2 : 23 - 24.

“புலன் அழுக்கற்ற அந்தணாளன்” - புறம் : 126:11.


“யானே பரிசிலன் மன்னும் அந்தணன்”
- புறம் : 200 : 13:

"அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே'.
-புறம் : 201 : 7:


“கேள்வி முற்றிய வேள்வி அந்தணன்”
- புறம் : 361 : 4

“ஆக்குரல் காண் பின் அந்தணாளர்”
- புறம் : 362 : 8.