பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் ... முதல் நுழைவு

323

“இறைஞ்சுக பெரும! நின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே,”
-புறம் : 6 19 . 20.


“ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர்.”
-புறம் : 26:12-13.


“அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்”.
- புறம் : 93 : 7.


“வேத வேள்வித் தொழில்,”
- புறம் : 228 : 9.


இவையெல்லாம், அவர்களின், வேதப்புலமை, வேள்வித் தீ, ஏற்றுக்கொண்ட கொடைவளம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனவேயல்லது, காதலர்களிடையே, அவர்கள் மேற்கொண்ட தூது பற்றிக் குறிப்பிடவில்லை. அகநானுாற்றில் அக வேள்வி செய்தறியாத ஒரு பார்ப்பானும், “வேளாப் பார்ப்பான்” (அகம்: 24 : 1) அரசர்களிடையே தூதுவத் தொழில் மேற்கொண்டு செல்லுங்கால், மழவர் என்ற ஆறலைகள் வரால் கொல்லப்பட்ட ஒரு பார்ப்பானும், “தூது ஒய் பார்ப்பான் மடி வெள்ளோலை... தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்” (அகம் : 337 : 7-11), குறுந்தொகையில், மணம் ஆகா இளையபார்ப்பான் ஒருவனின் உடைமைகளும், “தண்டொடு பிடித்த, தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக்கற்பின் நின் சொல்” (குறுந்தொகை : 156 : 3-5) கூறப்பட்டுள்ளனர். ஆனால், காதலரிடையே தூது செல்லும் செயல் எதுவும், அவற்றில் குறிப்பிடப்படவில்லை. காதலரிடையே, பார்ப்பனர் தூது செல்லும் மரபினைத் , தொல்காப்பியனார், சமஸ்கிருத நாடகத்திலிருந்தே, தமிழ்ப் பாக்களுக்குக் கொண்டுவந்திருப்பதால், அவர், முறையான நாடகங்கள், சமஸ்கிருதத்தில் வளர்ந்துவிட்ட பிற்காலத்தில், வாழ்ந்திருக்கவேண்டும்.