பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

தமிழர் வரலாறு

வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு இசைந்து வந்திருந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

‘’ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் ,
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளினும் நன்கு இனிது உறைகு என,
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது.”

-மணிமேகலை : விழாவறை காதை : 3-9

இதன் பொருள் : ஒங்கி உயர்ந்த மலைக்கு உரிய, அரிய தவம் புரிந்த முனிவன் ஆணையிட, வானில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டையை அழித்த, தொடி அணிந்த தோளினை உடைய சோழன், வானவர் தலைவனாம் இந்திரனை வணங்கி, அவன் முன் நின்று 'மண்ணுலகில், எனக்கு உரிய சிறந்த தலைநகரில் பெரியவர்கள் விரும்ப விழாக் கொண்டாடும், இருபத்தெட்டு நாட்களிலும் வந்து நன்கு இருப்பாயாக’’ என வேண்டிக்கொள்ள, தேவர் தலைவனும் அது நேர்ந்தான் என்பதாம், -

கொண்டாட மறந்துவிட்டதால், தலைநகரைக் கடல் கோளாம் பேரழிவுக்கு உள்ளாக்கிவிட்ட இந்திரவிழா வந்த வரலாறு இது. அப்பாட்டின் பிற்பகுதியில், அகத்தியர் குறித்த மற்றொரு குறிப்பும் இடம் பெற்றுளது. அது, பரசுராமன், ஷத்திரிய அரசர்க்ளையெல்லாம் அழித்துவரும் போது, காவிரிப் பூம்பட்டினத்துக் காவல் தெய்வம், மறைந்து கொள்ளுமாறு ஆணையிட, காந்தமன் என்ற அரசனும் துயர் தீர்ந்துவிட்டது என அகத்தியன் அறிவிக்கும் வரை, தலைநகரைக் காக்குமாறு பின்னோனுக்கு ஆணையிட்டு, அம்முனிவர் தவப்பள்ளியில் மறைந்து வாழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது,