பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

337


தொன்பதின்மரும்அமர்வதால் நேரும் பாரத்தைப் பொருட்படுத்தாமல், மதுரைத் திருக்கோயில் குளத்தில் மிதந்து கொண்டிருக்கும், இறைவன் அருளிய சங்கப் பலகை மீது அமர்ந்துகொண்டனர்.

அப்பலகை மீதமர்ந்தவாறே, புலவர்கள் ஒவ்வொரு வரும், ஒவ்வொரு விதமான உரைவிளக்கம் அளித்துத், தாம் அளித்த உரை தான் நேரிய உரை, பொருந்தும் உரை என வாதிடலாயினர். உண்மையான உரை இதுதான் என அறுதியிட்டுக் கூறுவதற்கு, அறிவால் முதிர்ந்தவர் ஒருவரும் அப்புலவரிடையே இல்லை. உடனே, இறைவன், உருத்திரசன்மன் எனும் ஐந்து வயது நிரம்பிய ஊமைச் சிறுவனைத் தேடிக் கொணர்ந்து, நடுவராக்குமாறு பணித்தார். ஊமைச்சிறுவன் கேட்க, புலவர்கள் தங்கள் தங்கள் உரைகளைப் படிக்க லாயினர். நக்கீரர், தம்முடைய உரையைப் படிக்கும்பொழுது, ஊமைச்சிறுவன், அவ் உரையின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆனந்தக்கண்ணிர் சொரிந்தான். அதனால் நக்கீரர் உரைதான் பொருந்தும் உரை என முடிவு செய்யப்பட்டது. (அகப்பொருள் நூலின் மொழிநடை, அக்காலத்திய ஏனைய நூல்களின் நடையை விடத் தெளிவு இல்லாததோ, எளிதில் பொருள் உணரலாகாக் கடினமானதோ அன்று; ஆகவே அரசன், அத்துணை முயற்சிகளை எடுத்திருக்கத் தேவையில்லை; அவ்வுரை, மூலத்தின் பொருளை விரிந்துரைப்பது மட்டு மல்லாமல், மூலம் எழுந்த காலத்திற்கும் பிற்பட்ட காலத்தில் விரிவாக எடுத்துக் கூறப்பெற்ற பல பொருள்களையும் கொண்டுளது என்பதும் ஈண்டுக் கூறல் தகும்.) அகப் பொருளுக்கு உரை கண்டவரே உருத்திரசன்மர்தாம் எனக் சிலர் கூறுகின்றனர் என்றும் உரையசிரியர் கூறுகிறார். ஆனால் புலவர்களின் கருத்து, உரைகண்டவர் நக்கீரர் என்பதே. நக்கீரர் அருளிய அவ்வுரை, பத்தாவது தலை முறையில் வந்த முசிறி நீல கண்டனாரை வந்து அடையும் வரை, மாணவர்களிடையே வாய்மொழியாக வழிவழி வந்தது என்றெல்லாம் கூறிச் சென்று, இறுதியாக "இங்ஙனம் வருகிறது இவ்வுரை" என முடித்துள்ளார் உரையாசிரியர்.

த. வ.-22