பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

தமிழர் வரலாறு

இதில் கூறப்பட்டிருக்கும் பிற எண்களும், மேற்கூறிய எண்களைப் போலவே செயற்கையானவையாகவும், மிகவும் நம்பக் கூடாதனவாகவும் உள்ளன. மேலும், முன்னோர்கள் 549 பேர், 4440 ஆண்டுகளே ஆட்சிபுரிந்திருக்க, 59 அரசர்கள், 3700 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனராகக் கூறுவது பொருளற்றதாகும். முதல் இரண்டு சங்கங்களின் ஆயுட்காலமாகிய 8140 ஆண்டுகள், அகத்தியனார் வாழ்ந்ததாகக் கூறப் பட்டுளது. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த 49 அரசர்களும் இறந்துபோயிருக்க, அக்காலத்தைச் சேர்ந்த 49 புலவர்கள் மட்டும் 1850 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர் என்பதை நம்புவது நம்மால் இயலாது. ஆகவே, இதில் கூறப்பட்டிருக்கும். எண்களில் எதுவும் நம்பக் கூடியதாக இல்லை.

 இச்சங்கங்கள் குறித்த கதையில், வெறும் எண்கள் மட்டுமல்லாமல், அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவும் நம்பக்கூடியன் அல்ல. புறநானூற்றிலும், மற்றும் பிற தொகை நூல்களிலும் உள்ள பாடல்கள் அனைத்தும், கடைச் சங்க உறுப்பினர்களால், அல்லது அவர்கள் ஆய்வின் கீழ்ப் பணிபுரியும் புலவர்களால் பாடப்பெற்றன எனக் கூறப் படுகிறது. ஆனால், அத்தொகை நூல்களில், பாண்டிய அரசர்களை வெற்றி கொண்டு, இழிவு படுத்திய சில சோழ, அரசர்களின் செயலைப் பாராட்டும் பாடல்கள் இடம்பெற்றி ருப்பதைக் காண்கிறோம். (அத்தகு பாடல்கள் பலவற்றில், புறம் : 31, 33 காண்க) இத்தகு பாடல்களின் ஆசிரியர்கள், பாண்டிய அரசர்களால் புரக்கப்படும் சங்கத்தில் உறுப்பினராக ஆகியிருக்க முடியும், சங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பர், அல்லது, அத்தகு பாடல்கள், மதுரைப் பாண்டிய அரசர்களால் தொகுக்கப்பெற்ற தொகை நூல்களில் சேர்க்கப்பட்டிருக்கும் என நம்புவது இயலாத ஒன்று. கிடைக்கக் கூடிய பழம்பாடல்களை அழிவினின்றும் காத்தற் பொருட்டுத் அத்தொகை நூல்கள் பிற்காலத்தே தொகுக்கப்பட்டன.
 மேற்குக் கடற்கரையைச் சார்ந்த முசிறி முதல், கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த மயிலாப்பூர் வரையிலான, தமிழ்