பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழர் வரலாறு

எனச் சிறிதும் மறைப்பின்றிக் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இரு சிறு மாவட்டங்களைக் கைக்கொண்ட நிகழ்ச்சியைச், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளார். வட நாடு முழுமையும் கைக்கொண்ட பெருவெற்றியாகத் திரித்துக் கூறியுள்ளார். எதையும் அஞ்சத்தக்க வகையில் மிகைப்படுத்திக் கூறுவது, இப்புலவர் இயல்பாக மேற் கொள்ளும் ஒன்று. இருந்தும், இன்றைய திறனாய்வாளர் சிலர், இதுபோலும் மிகைப்படுத்திக் கூறல், நிறைந்திருக்கும் அந்நூலை, அதில் கூறியிருக்கும் ஒவ்வொரு சொல்லும், அப்பழுக்கற்ற - உயர்வு நவிற்சி அற்ற - உண்மையாம் என ஏற்றுக்கொள்ளத்தக்க, தகுதிவாய்ந்த வரலாற்று நூலாக மதித்து, அதில் வரும் ஒரு சிறு தொடரை அடிப்படையாகக் கொண்டு, மிகப் பெரிய முடிவுகளைக் கொண்டுவிடுகின்றனர்.

கடல்கோளால் மறைந்து போன மாவட்டங்களில் ஒன்று, மதுரை நாடு. இது, பாண்டியரின் முதல் தலைநகராம் மதுரையும், அதன் பக்கங்களுமாம். இம்மாவட்டம் கடலுள் மூழ்கிவிட்ட பின்னர், தலைநகர், கபாடபுரத்திற்கு மாறியது. இயல்பாக நிகழக் கூடியதே. இச்சொல், “பாண்டி நாட்டின் வாயில்” எனும் பொருளுடையதான “பாண்டிய கவாடம்” என்ற சமஸ்கிருதச் சொல்லின் தழுவல் வடிவமே ஆகும். அவ்விடத்தின் தமிழ்ப் பெயர், கொற்கை. இந்த இடம் கைவிடப்பட்டபோது, இன்றைய மதுரை தலைநகர் ஆயிற்று. தலைநகர், கொற்கையிலிருந்து மதுரைக்கு மாறியது, பிளினி அவர்களாலும் குறிப்பிடப்பட்டுளது. [Warmington Commerce between the Roman Empire and India Page: 167] அரசன் தன் வாழிடத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவன் அவைப்புலவர்களும் புதிய தலைநகர்க்குக் குடிபெயர்ந்து விடுவர் என நாம் நம்பலாம். மூன்று தலைநகர்கள் இருந்தன என்ற உண்மை, முச்சங்கங்கள் குறித்த கட்டுக்கதையினைத் தோற்றுவித்தது.