பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

359


என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவமாம். ஜைனர்கள்; இச்சொல்லை, மகாவீரரைப் பின்பற்றுவோராம், பிக்குகள். பிக்குனிகள் ஸ்ராவகர், ஸ்ராவீகர்களைக் கொண்ட ஒர் அமைப்பைக் குறிக்க வழங்கினர். பிக்கு. பிக்குனி என்பவர்கள், முறையே, உடலை வருத்திக்கொள்ளும் கடும் நோன்பு உள்ளிட்ட கடுமையான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றிப், பொதுவாக, இறுதியில் தம்மைத்தாமே வருத்தி உயிர் இழக்கும் நிலைக்குக் கொண்டுபோய்விடும், பின்பற்றற்கரிய யோக நெறி பேணு ம ஆண் துறவியும் பெண் துறவியுமாவர்; ஸ்ராவகர், ஸ்ராவிகர் இருவரும் ஆண் பெண் இருபாலினருமான துறவு நிலையை எதிர் நோக்கும், தீக்கை பெறாத மாணவர்களாவர். மொத்தத்தில் அவை அனைத்துமே, ஜைனப்பெருநிலை அடைய விரும்புவோர்களைக் கொண்ட, முறையாக அமைக்கப்பட்ட குழுக்களாம். பெளத்த சங்கம் என்பது, ஜைன சந்நியாசிகளும், பிராமணத் துறவிகளும் பின் பற்றும் துறவு நிலை போல், அத்துணைக் கொடுமை இல்லாத துறவு நிலை மேற்கொண்டு, தங்களுக்கென வகுத்துக்கொண்ட ஒரு யோக நிலை பயின்று, மடங்களில் வாழும் இருபால் துறவிகளின் மன்றமாம். பெளத்த சந்தியாசிகள், மக்களுக்குத் தர்மோபதேசம் செய்வர். ஆனால் சமய உணர்வற்ற சாதாரண மக்களைத் தங்கள் சாதுக்கள் கூட்டத்தில் இணைத்துக்கொள்ளார். இந்த ஜைன, பெளத்த துறவிகள், தமிழ் நாட்டிற்குக், கி. மு. நான்காம் நூற்றாண்டு தொடங்கி வரத் தலைப்பட்டனர் ; ஆனால், தொடக்கத்தில் மலைகளில் இயல்பாய் அமைந்து கிடந்த குகைகளிலும், பின்னர், தலைநகர்களின் புறநகர்ப் பகுதியில் உள்ள பூஞ்சோலைகளிலும் வாழ்ந்து வந்தனர். என்றாலும், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை, சாதாரண தமிழ்ப் பொதுமக்களின் வாழ்க்கையினைத் தம் செல்வாக்கின் கீழ்க் கொண்டுவரவில்லை; ஆகவே தான், அவர்களைப் பற்றிப், பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை அவர்கள் முதன் முதலில், பட்டினப் பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும்தான் குறிப்பிடப் பட்டனர்.