பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

361

நாம் உணர்ந்த தமிழ்ச்சங்கம் இதுவன்று என்பதும், தமிழ்நாட்டு ஜைனர்களால் சாதாரணமானவர்களுக்கு ஜைன தர்மத்தை உபதேசிக்கத் தொடங்கப்பட்ட ஜைன சங்கமாம் என்பதும் ஈண்டுக் குறிப்பிடப்படவேண்டும். தமிழ்நாட்டில் இடம் பெற்ற முதல் பெளத்த சங்கம், காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்ததாக, மணிமேகலைக் காவியத்தில் குறிப்பிடப்பட்டுளது. அந்நகரில், விடியற்காலையில் கேட்கும் பல்வேறு ஒலிகளில், வலம்புரிச் சங்குகளின் பொருள் இன்றி வறிதே ஒலிக்கும் ஒலியும், அறிவு ஆர்ந்த சங்கங்கள், பொருள் உணர எழுப்பும் ஒலியும் கூறப்பட்டுள்ளன.

“வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்,

புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க”

-மணிமேகலை : 7 : 1.13 - 114


[வலம்புரியின் பெயராம் சங்கம் என்பதும், மன்றம் எனும் பொருள்படும், வடமொழியினின்றும் பெற்ற சங்கம் என்ற சொல்லும், ஒரே ஒலிப்பு முறையினைக் கொண்டிருப்பதால் இச்செம்மொழிச் சிலேடை அணி இயல்வதாயிற்று.]

பெளத்தம், தர்மம், சங்கம் ஆகிய மும்மணிகளும் அதே மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

“புத்த தன்ம சங்க மென்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கி”

- மணிமேகலை : 30 : 34).


கி. பி. ஆறாம் நூற்றாண்டில், ஜைன பெளத்த சமயங்களோடு, மதுரையில் சைவ சமயம் போட்டியிடத் தொடங்கியபோது, அப்புறச்சமயவாதிகளின் சங்கங்களுக்குப் போட்டியாக, தங்களுக்கும் ஒரு சங்கம் உளது எனப் பெருமை கொள்ளச் சைவர்கள் இயல்பாகவே விரும்பினர். பழைய தொகைநூற்புலவர்களில், தங்கள் தொகை நூற்பாடல்களில் சிவனைக் குறிப்பிட்ட, அல்லது, சிவனோடு ஏதோ ஒரு