பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

தமிழர் வரலாறு

அந்தக் காலத்தைக் குறிக்க, சங்க காலம் என்ற தொடரை மேற்கொள்வராயினர். அகப்பொருள் உரையாசிரியர், எட்டுத் தொகையும், இன்று அழியாதிருக்கும் வேறு சில நூல்களும், மூன்றாவது சங்க உறுப்பினர்கள் நாற்பத்தொன்பதின்மர் மேற்பார்வையின்கீழ், நானூற்று நாற்பத்தொன்பது புலவர்களால் பாடப்பட்டன எனத் தெளிவின்றிக் கூறியுள்ளார். எட்டுத்தொகை பாடிய புலவர்களை எண்ணிப் பார்க்கும்போது, அவ்விரு எண்களையும் நம்மால் காண முடியவில்லை. அவ்வுரையாசிரியர் கூற்றுப்படி, முதல் இரண்டு சங்கங்களைச் சேர்ந்த புலவர்களும், இத்தொகை நூலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை, நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், இன்றைய எழுத்தாளர் சிலர், இத்தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருக்கும் பாக்களைப் பாடிய எல்லாப் புலலர்களும், ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக் காலத்தில் வாழ்ந்தவராவர் எனத் தங்களுக்குத் தாங்களே முடிவுசெய்துகொண்டுள்ளனர். அப்படியென்றால், பழந்தமிழ் இலக்கியங்கள், தென் இந்திய அடிவானத்தில், எல்லை காணமாட்டாப் பேரிருள் முன் நிற்க, உலகப் பிரளயம் பின்தொடரப் பேரொளிப் பிழம்பாக விழும் விண் வீழ் கொள்ளிபோல், திடுமெனத் தோன்றியதாதல் வேண்டும். ஆகவே, அக்கூற்று, பொருளில் கூற்றே ஆகும். இக்கூற்று, இந்நில உலகில், உயிர்களின் உருவெளிப்பாடு, தொடக்கம் அற்ற பெருங்குழப்பம் ஒய்ந்த நிலையில் திடுமெனத் தோன்றி, தோன்றிய அதே வேகத்தில் அழிந்துவிடும் ; எல்லை காண மாட்டா இரவு, இடையே வந்துறும் என்ற, லிஞ்ஞான அறிவு வாய்க்காத மக்களின் தெளிவிலா முடிவினையே நமக்கு நினைவூட்டுகிறது. அதற்கு மாறாகத் தமிழ்ப் பாக்கள், இவ்வுலகப் பெருவெளியில் உள்ள ஏனைய எல்லாப் பொருள்களையும் போலவே, பல நூறு ஆண்டுகால அளவில், மெல்ல மெல்லப் பெற்ற வளர்ச்சியின் பயனே ஆகும். அதனுடைய பிறப்பு முதல் இன்றுவரை, இடையறவுபடா வளர்ச்சி நிலையினையே அது கொண்டுள்ளது: