பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

தமிழர் வரலாறு

இவ்வாறெல்லாம் கூறியிருக்கும் திருவாளர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள். தமிழ்ச் சங்கங்களின் வரலாறு கூறும், இறையனார் அகப்பொருள் உரை, கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்காக, அத்தமிழ்ச் சங்கங்கள் இருந்தமையினை ஏற்க மறுத்து அடுக்கடுக்கான எதிர்வாதங்களை வைத்துள்ளார்.

அவ்வாதங்களின் வன்மை மென்மைகளை, இனி, நிரலே ஆராய்ந்து நோக்குவோம்:

“பழங்காலத்தில், உண்மையில் கூறப்போனால் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை, கிறித்துவ ஆண்டு, வள்ளுவர் ஆண்டு போலும் ஆண்டுக் கணிப்பு முறை, தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது பின்பற்றப்படவில்லை; ஆகவே, ஆண்டுகளைப் பேரெண் அளவில் எண்ணிக் காணும் வழிமுறை இடம் பெறவில்லை. உண்மைநிலை இதுவாகவும், முச்சங்கங்களின் ஆயுட்காலம், முறையே 4400, 3700, 1850 ஆண்டுகள் எனப் பேரெண் அளவில் ஆயுள் வகுத்திருப்பது ஒன்றே, முச்சங்க அமைப்பு என்பது, வெறும் கற்பனையே அல்லது, உண்மையில் இருந்த ஒன்று அன்று”. (பக்கம் : 232) என்பதை உறுதி செய்யும்.

முச்சங்கங்கள் இருந்தன என்பது நம்ப இயலாத ஒன்று என்ற தம் கருத்துக்குத், திருவாளர் பி.டி.சீனிவாச அய்யங்கார் காட்டும் காரணங்களுள் முதலாவது காரணம். இது

முச்சங்கங்களின் ஆயுட்காலம் முறையே 4400, 3700, 1850 என, அவற்றின் ஆயுட்காலந்தான் கூறப்பட்டுள்ளதேயல்லாது கிறித்து பிறப்பதற்கு முன்னர் (கி.மு.) அதற்குப் பின்னர் (கி.பி.) என்பதுபோல் இன்னார் பிறப்பதற்கு முன் இத்தனை ஆண்டுகள் என்றோ, அதற்குப்பின் இத்தனை, ஆண்டுகள் என்றோ, ஆண்டுக் கணிப்பு நிலையில் கூறப்படவில்லை; ஆகவே, அப்பழங்காலத்தில், தமிழகத்தில் ஆண்டுக்கணிப்பு முறை இருந்ததா இல்லையா என்பது பற்றிய ஆய்வுக்கு இங்கு இடம் இல்லை.