பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

தமிழர் வரலாறு

வாழும் உயிர்க்கு” (குறள் : 392) என்ற அவர் குறளைக் காண்க: ஒன்று முதல் கோடிவரை எண்ணத் தெரிந்தவர் பழந்தமிழர். “ஒன்று இரண்டு அல பல” (பதிற்றுப்பத்து: 41) “ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்” (குறள் : 932), “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்வேள்வி” (முருகாற்றுப்படை 155-156) இவை, ஒன்று முதல் நூறு வரை எண்ணத் தெரிந்தவர் என்பதற்கான அகச்சான்றுகளுள் சில. “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்” (குறள் : 259), “ஆயிரம் வெள்ளம் வாழிய”, “ஆயிரம் வெள்ள ஊழி வாழி யாத” (பதிற்றுப்பத்து : 21, 63), “வேலி ஆயிரம் விளையுட் டாக” (பொருநராற்றுப்படை : 246), “வேலி ஆயிரம் விளைக” (புறம் 391), “ஆயிரம் வித்தியது விளைய” (மதுரைக் காஞ்சி : 11) இவை ஆயிரத்தையும் அறிந்தவர் அன்றைய தமிழர் என்பதற்கான எடுத்துக்காட்டுக்கள். ஒரு கோடி, பத்து கோடி, எழுபது கோடி, கோடிகோடிகளையும் எட்டிப் பிடித்தவர் பழந்தமிழர் என்பதற்கான அகச்சான்றுகளில் ஒரு சில இதோ. “பேதை பெருங்கெ மீஇ நட்பின், அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.” (குறள் : 816): “கோடி தொகுத்தார்” (குறள் : 377) “இரவாமை கோடி உறும்” (குறள்: 1061) “கோடியாத்து நாடு பெரிது, நந்தும்” (புறம் 184) : “நகைவகையராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்” (குறள் : 817), “பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்” (குறள் : 639) “ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப, கோடியும் அல்ல பல” (குறள் : 387) “கோடி பல அடுக்கிய பொருள்” (புறம் : 202) கோடிபல அடுக்கிய கொழுநிதி: (சிலம்பு : கடலாடு காதை 121) “அடுக்கிய கோடி பெறினும்” “அடுக்கிய கோடி உண்டாயினும்” (குறள் : 954, 1005):

ஒன்று இரண்டு எனத் தொடங்கிச் செவ்வெண் வரிசையில் பல கோடி வரை எண்ணத் தெரிந்திருந்தனர் என்பது மட்டும் அன்று. ஒன்றின் பல மடங்கை உணர்த்தும் பெருக்கல் எண்ணையும் அறிந்தவர்கள் அன்றைய தமிழ்க்