பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

தமிழர் வரலாறு

தோற்றமொடு உட்குவர விளங்கி, இன்னீர் ஆகலின் இனியவும் உளவோ? (புறம் : 58) எனப் பாராட்டியிருப்பதும் நிகழ்ந்துளது.

அது மட்டும் அன்று, சேரனையும், சோழனையும், வாழ்த்திப் பாடிய புலவரைப் பாண்டியன் வெறுப்பதோ, சோழனையும், பாண்டியனையும் பாடிப் பாராட்டிய புலவரைச், சேரன் சினப்பதோ, பாண்டியனையும், சேரனையும் சிறப்பித்த புலவரைச், சோழன் புறக்கணிப்பதோ நடைபெறவில்லை. மாறாக, அத்தகு புலவர்களையும், வரவேற்றுப் பரிசு அளித்துப் பெருமை செய்துள்ளனர்.

சோழர் குலத்துவந்த உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், (புறம் : 4) அவன் மகன் கரிகால் பெருவளத்தானையும் (அகம் : 1.25, 246) அக்குலத்து வேற்பஃறடக்கைப் பெரு விறற் கிள்ளியையும் (புறம் : 63) பாடிய பரணர், அவ் வேற்பஃறடக்கைப் பெரு விறற் கிள்ளியோடு போரிட்டு இறந்த, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் (புறம் : 63) அவன் மகன் செங்குட்டுவனையும் (பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்து) பாடியுள்ளார். தன் தந்தையின் இறப்பிற்குக் காரணமாய் இருந்த, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி யையும், அவன் குல முன்னோர்களையும் பாடிய பரணர், தன்னையும் பாடுவதா எனச், செங்குட்டுவன் வெறுக்கவில்லை; மாறாக, அவர் பாக்களை ஏற்று, அவற்றிற்குப் பரிசாகத், தன் ஆட்சிக்கு உட்பட்ட உம்பற்காட்டின் வருவாயினை வழங்கியதோடு, தன் மகனை, மகனாக வளர்க்கும் பெரும் பொறுப்பையும் அவர்க்கே அளித்தான். (பதிற்றுப்பத்து : ஐந்தாம் பத்தின் பதிகம்) -

தன் குல முன்னோர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கத்திற்குத் தன் காலத்தே தலைமை ஏற்றிருந்த நக்கீரர், நெடுநல் வாடை என்ற நெடிய பாட்டிலும், அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் (அகம் 36) தம் புகழ் பாடினார். என்றாலும், அரண்பல கடந்த முரண்கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல்