பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தமிழர் வரலாறு

முதுகில் அம்பு தைத்துவிட்டது என்றாலும் உயிரிழந்து போய்விட வில்லை. எண்ணியிருந்தால், ஒடி உயிர் பிழைத்திருக்க முடியும் அவனால். ஆனால், அவன் வீர உள்ளம், அது செய்ய மறுத்துவிட்டது. புறப்புண் பெற்றமைக்கு நாணி, உண்ணா நோன்பு மேற்கொண்டு வடக்கிருந்து உயிர் விட்டான். அச் செயல் வெண்ணிப்போரில், தோல்வியால் அவனுக்கு உற்ற இழிவைத் துடைத்துவிட்டு, அவனுக்கு இறவாப் புகழை அளித்துவிட்டது.

வெண்ணிப் போர்க்கள நிகழ்ச்சிகளையும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் விட்ட பெருஞ்சிறப்பையும் கண்ணெதிர் காணும் வாய்ப்பு பெற்ற, அவ்வூர்க் குயவர் குலத்துவந்த பெண்பாற் புலவர் ஒருவர், நேரே கரிகாலன் அவைக்குச் சென்று, வெண்ணிப்போர் வெற்றிக் களிப்பில், தன்னை மறந்து மகிழ்ந்திருக்குங் கரிகாலன் முன் நின்று, வேந்தே ! வெண்ணிப் போரில் வெற்றி கண்டவன்தான் நீ ; ஆனால், அவ்வெற்றி, அழிவுநர் புறக் கொடை அயில்வேல் ஒச்சாக் கழிதறுகண்மையைக் கைவிட்டு, புறமுதுகு இட்டார் மீதும் வேல் எறிந்து பெற்ற வெற்றி ; அதனால் அத்தகு வெற்றி பெற்ற நீ, நல்லவன் இல்லை. உன்னால் பெற்ற புறப் புண்ணுக்கு நாணி, வெட்கி, வடக்கிருந்து உயிர் விட்டானே. சேரலாதன், அவனே உன்னிலும் நல்லவன் எனத் துணிந்து: கூறிவிட்டார்-

கரிகால் வனவ !
சென்று அமர்க் கடந்த, நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் ! நின்னினும், நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே ? .

--புறம் : 66

வெண்ணிக் குயத்தியார் கூற்றில், உண்மை இருப்பதை உணர்ந்தமையால் கரிகாலன், தன் பகைவனைத் தன்முன்