பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396 தமிழர் வரலாறு

என்பதையும், எவ்வித ஐயத்திற்கும் இடம் கொடாமல் ஏற்றுக்கொள்வர்.

அத்தகைய முதிய கல்வியாளர்கள் கூடி இருக்கும் இடத்திற்கு, வள்ளுவர், சான்றோர் குழாம் (840) என ஓரிடத்தில் பெயர் சூட்டியிருப்பினும், ஏனைய இடங்களில் எல்லாம் 'அவை' என்ற பெயரையே சூட்டியுள்ளார். "அவை" (711) 'நல்லவை' (719, 278) "நல்லார் அவை" : (729) என்ற தொடர்களைக் காண்க:

தாம் கற்ற கல்வியின் அளவை, தம் நாவளத்தால் வெளிப்படுத்த, நல்லோர் கூடியிருக்கும் அவைக்குச் சென்ற ஒருவர், யாது காரணத்தாலோ, அது செய்ய மாட்டாது தளர்ந்து போகும் நிலையில், அவரின் இயலாமை வெளித் தெரியாவாறு மறைத்துவிடுவதோடு, அவர் சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிப்பதற்கும் துணை புரிந்து, அவரைச் சொல்ல வைத்து, நல்வழியில் நடைபெறச் செய்யும் நல்லோர் பலர் ஒன்று கூடி இருக்கும் ஓர் அமைப்பு, பழந் தமிழ்க் காலத்தே இருந்ததை, மலைபடுகடாமும் உறுதி செய்கிறது. அத்தகு அமைப்புக்கு, அது சூட்டியிருக்கும் பெயரும் 'அவை' என்பதே,

'நல்லோர் குழிஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச், சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கும் அவன் சுற்றம்'. -மலைபடுகடாம் : 77 - 80

பண்டைத் தமிழகத்தில், கற்றுவல்ல நல்லோர் குழுக்களைப் போலவே, வேறுசில குழுக்களும் இருந்தன; வலியரால் நலிவுற்றும், வறுமையால் மெலிவுற்றும் வந்து அணுகுவார் முறையீடு கேட்டு அறம் வழங்கும் அறவோர்கள் குழுவும் பண்டு இருந்தது; அரசனைப் பிரியாதிருக்கும், ஐம்பெருங்குழு, எண் பேராயம் உள்ளிட்ட அரசியல் குழுவும்