பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398 தமிழர் வரலாறு

செல்வோர்க்கு இட்டு வழங்கும் பட்டமே 'தலைவர்' என்பது. நிலைமக்கள் சால உடைத்தெனினும், தானை, தலைமக்கள் இல்வழி இல் (குறள் : 770) 'கோடியர் தலைவ!’ (பொருநராற்றுப்படை : 57) "கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ" (மலைபடுகடாம் : 50) என்ற தொடர்களைக் காண்க.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன்னுடைய பாட்டில் 'மாங்குடி மருதன் தலைவனாக... புலவர் பாடாது வரைக' என்ற தொடரை ஆண்டுள்ளான் என்றால், அவன் காலத்தில் புலவர் பலர் கூடிய ஓர் அமைப்பு இருந்தமையும், அதற்கு மாங்குடி மருதன் தலைமையேற்று இருந்தமையும் ஐயத்திற்கு இடமின்றி உறுதி ஆகின்றன. உண்மை நிலை இதுவாகவும், அவன் பாட்டில் "சங்கம்" என்ற சொல் இடம் பெறாமை ஒன்றை மட்டுமே கொண்டு, அவன் காலத்தில் தமிழ்ச்சங்கமே இல்லை எனத், திரு.பி.டி. எஸ். அவர்கள் கூற்று ஏற்புடையதாகாது.

கடைச்சங்கத்தின் ஆயுட்காலமாகக் கூறப்பட்ட 1850 ஆண்டு வரையும் நக்கீரர் ஒருவரே தலைவர் எனக் களவியல் உரை கூறவில்லை. அது கூறியிருப்பதெல்லாம், கடைச் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார், சிறு மேதாவியரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர் கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதன் இளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மர் என்ப' என்பதே. இத்தொடர் மூலம், நாம் உணரக்கூடியதெல்லாம், கடைச் சங்கத்தின் தலைவராக, நாற்பத்தொன்பது புலவர்களும் இருந்தனர். அவர்களுள் பெயர் அறியப்பட்ட எண்மரில் நக்கீரரும் ஒருவர் என்பது மட்டுமே. இவ்வுண்மை நிலைகளை உணராத காரணத்தால், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்திலும், கடைச்சங்கத் தலைமை ஏற்றிருத்தவர் நக்கீரரே என்ற தவறான முடிவு கொண்டுவிட்டார்,