பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

தமிழர் வரலாறு

விழவயர் துணங்கை தழு உகம் செல்ல,
நெடுநிமிர் தெருவில் கை புகு கொடுமிடை,
நொதும லாளன் கதும் எனத் தாக்கலின்,
"கேட்போர் உளர்கொல்? இல்லை கொல்? போற்று" என
"யாளது பசலை", என்றனன்! அதன் எதிர்'
நாணிவை எலுவ !' என்று வந்திசினே :
செறுநரும் விழையும் செம்மலோன், என,
நறுதுதல் அரிவை ! போற்றேன் ;

சிறுமை பெருமையின் காணாது, துணிந்தே'.
- நற்றிணை : 50

துணங்கையாவது, ஆடவரும் பெண்டிரும் பங்கு கொள்ளும் ஒருவகை ஆடல்; ஆடுங்கால், கைகளை வளைத்து ஒருவரையொருவர் தழுவிக்கொள்வர், அது, மக்களைப் போலவே, பேய்களுக்கும் போதுவானது. கண்டாரை உளம் நடுங்கப்பண்ணும் நடையும், கண்டார்க்கு அச்சம் ஊட்டும் உருவமும் உடைய பேய்மகள், செங்குறுதி துழாவிய கூரிய நகங்களைக் கொண்ட விரல்களால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்டுவிட்ட முடை நாற்றம் உடைய கரிய பிணத்தின் தலையைத், தொடியணிந்த கையில் ஏந்திக் கொண்டு, பகைவர்க்கு அச்சம் வருமாறு, எதிர் சென்று அழிக்கும் போர்க் களத்தைப் பாடித் தோள் குலுங்க அப்பிணத்தைத் தின்னும் வாயுடையவளாய்த் துணங்கைக் கூத்து ஆடா நிற்கும்".

உருகெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்,
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்,
கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருத்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி, வெருவர
ஏன்றுஅடு விறற்களம் பாடித், தோள்பெயரா

நினம்தின் வாயள் துணங்கை தூங்க.
-திருமுருகாற்றுப்படை : 51-56