பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை கி. பி. ... ஆண்டுகள்

459

இத் துறைமுகம் மற்றுமோர் இடத்தில், “மணம் நாறும் மலர்களையுடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களை நீராடும் துறையில் நீராடும் மகளிர்களின் தோள்களுக்குத் தெப்பம் ஆகித் துணைபுரியுமாறு, கரைகளைக் குத்தி அழிக்கும் பெருவெள்ளம் அடித்துக் கொண்டுவந்து தரும் ஆற்றுவளம் மிக்கதும், அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்த தொல்பெரும் நகராம் இலங்கையின் பெயரைத், தான் தோன்றிய போதே பெற்றதுமாகிய மாவிலங்கை’’ எனக் கூறப்பட்டுளது.

“நறுவி நாகமும், அகிலும், ஆரமும்
துறையொடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொருபுனல் தரூஉம் போக்கரும் மரபின்
தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை”
- சிறுபாணாற்றுப்படை : 1.18.120

காவிரி கடலொடு கலக்குமிடத்தில், தொல்லூழிக் காலத்திலிருந்தே புகழ் பெற்றிருந்த புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் இடம் பெற்றுளது. ஆகவே, அது பல பாடல்களில் கூறப்பட்டுளது. அப்புகார்த் துறைமுகம் மேலே விரித்த பாயைச் சுருட்ட வேண்டாமலும், ஏற்றிய பாரங்களை இறக்கி விடவேண்டாமலும், ஆற்றுமுகத்துத் துறைமுகத்துள் புகுந்த பெரிய கலத்திலிருந்து பணியாட்கள், பண்டங்களை, இடைநிலை நகருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்”. சிறப்புடையதாகக் கூறப்பட்டுளது.

“மீப்பாய் களையாது. மிசைப்பரம் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெரும்கலம், தகாஅர்,
இடைப்புலப் பெருவழிச் சொரியும்”

-புறம்: 30 : 11-13


பூக்கள் உதிர்ந்து பரந்து கிடக்கும் அகன்ற துறைகளையுடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் நுண்மணல் திரளுமாறு மேடாக்கிய வெண்மணற்.