பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

தமிழர் வரலாறு

அல்லது, அவ்வப்போது, திறைசெலுத்துவதன் மூலம், அச்சிற்றரசுகள், அப்பேரரசனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதும் ஆகிய இவைதாம். அச்சொற்றொடர்களுக்குப் பொருளாம்" என அவர் கூறுவது காண்க. (பக்கம் : 147)

பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்தும் இரண்டாவது உண்மை, தமிழகத்தின் தென் எல்லையாம் குமரியை உள்ளடக்கிய நாஞ்சில் நாடு, தமிழகத்தின் வடஎல்லையாம், வேங்கடத்தை உள்ளடக்கிய தொண்டை நாடு, தமிழகத்தின் வடமேற்கு எல்லைக்கு அணித்தான கொண்கானம், ஏழில் குன்றம், எருமைநாடு, குடகடலைச் சார்ந்த, சேரநாட்டு எல்லைக்குட்பட்டனவாய, குதிரை, கொல்லி, கோடை மலைகள், பாழிப்பெருநகர், வாகைப்பறந்தலை, முசிறி, தொண்டிக் கடல் துறைகள், குணகடல் நாடாம் சோழ நாட்டைச் சேர்ந்த, இடைக்கழிநாடு, கடல்மல்லை, கழார், அழிசி, ஆர்க்காடு, புகார், பாண்டி நாட்டு எல்லைக்குட்பட்ட, தோட்டி, பறம்பு, பொதினி, பொதியம், முதிரம், சிறுமலை ஆகிய மலைகள், கொற்கைத்துறை, ஆகிய இடங்களில் எல்லாம், சுருங்கச் சொல்லின், வடவேங்கடம், தென்குமரி, குணகுட கடல்களை எல்லையாகக் கொண்ட, தமிழகம் முழுவதும், தமிழ்மொழி வழங்கியது போலவே, தமிழரசர்களே, நீக்கமற இடங்கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர் என்பது,

குமரிமுதல் வேங்கடம் வரையான தமிழகம் முழுவதும், தமிழே வழங்கி வந்தது, தமிழரசர்களாலேயே ஆளப்பட்டு வந்தது என்பதை மெய்ப்பிக்கும் இத்தனை அகச்சான்றுகள் இருக்கவும், காஞ்சியும், அதைச் சூழ உள்ள நாடும் தமிழரசர்களால் ஆளப்படவில்லை ; மாறாகச் சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டு வந்தது எனத், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் கூறுவதற்கு அவர் காட்டும் முதற் காரணம், காஞ்சி ஆண்ட பழைய அரசர்கள் பெயர்கள், பழந்தமிழ்ப் பாக்களில் குறிப்பிடப்படவில்லை என்பது.