பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சீபுர மாவட்டம்

521

 இம்முடிவு உண்மைக்கு மாறானது; பகையரசர்களை வென்று அப்பகை நாட்டு மண் அளிக்கும் பயன் உண்டு வாழும் வீரவாழ்வும், போர்த்தொழில் வல்லமையால் தலையாய சிறப்புற்ற யானைப்படையும், வளமான தேர்ப் படையும் உடைய தொண்டையரை அறிந்துள்ளார். வேங்கட நாட்டவராய கல்லாடனார். "பொருவார் மண் எடுத்து உண்ணும், அண்ணல் யானை, வண்தேர்த் தொண்டையர்" (குறுந் : 260) யானைப் படையால் பெருமையுற்ற அத்தொண்டையார் வேங்கடமலை நாடாண்டவர் என்கிறார் தாயங்கண்ணனார், "வினைநவில் யானை விறல்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரும், நெடுங்கோட்டு ஒங்குவெள் ளருவி வேங்கடம்". (அகம் : 213) அவ்வேங்கட நாட்டு வெண்கோட்டுக்களிறுகள், பாண்டியர் படைக்குப் பெருமை சேர்க்கும் பேராண்மை வாய்ந்தவை என்கிறார், மதுரைக்கணக்காயர், "வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர்". (அகம் : 27) கன்று ஈன்ற பிடி, அது ஈன்ற கன்று ஆகியவற்றின் பசியினைப் போக்க மூங்கிலின் முற்றா இளந் தளிர்களைக் கொய்து கொணர்ந்து தரும் களிறுகள் நிறைந்த வேங்கடமலை, வெற்றிதரு வேலேந்திய திரையனுக்கு உரியது எனக் கூறித், தொண்டையர்க்கு உரியதான அவ் வேங்கடத்தைத் திரையனுக்கும் உரிமையாக்குவதன் மூலம் தொண்டையர்க்கும் திரையனுக்கும் உள்ள உறவினை நிலைநாட்டியுள்ளார், காட்டுர் கிழார் மகனார் கண்ணனார், "ஈன்று நாள் உலந்த மென்னடை மடப்பிடி, கன்றுபசிகளை இய, பைங்கண் யானை, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை" (அகம் : 85). திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பெரும்பாணாற்றுப்படையாடும் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், திரையனுக்கு உரிய மலை, முத்தீ மூட்டி வேள்விவேட்க விரும்பிய முனிவர்கள். களிறுகள், தங்கள் வெண்கோடுகளில் சுமத்து கொண்டுவந்து கொட்டும் விறகு கொண்டு வேள்வித் தீ எழுப்பும் விழுப்புகழ் வாய்ந்தது.