பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிபுர மாவட்டம்

521

வில்லை. அதுமட்டுமன்று. பழந்தமிழ்ப் புலவர்கள், “புரம்” என்ற ஈற்றுச் சொல் வடிவை அறவே வெறுப்பதும் செய்து வந்துள்ளனர். வடநாட்டுத் துவரகாபுரியைக் குறிப்பிடநேர்ந்த ஓரிடத்திலும், புரி என்ற அதன் ஈற்றையும், அதை, முதல் நிலையோடு இணைக்கும், இடைப்பகுதியையும் அறவே விடுத்து, 'துவரை' என அழைப்பதிலேயே ஆர்வம் காட்டியுள்ளனர். “துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுகத் வந்த வேளிர்” (புறம் : 201) என்ற கபிலர் கூற்றினைக் காண்க. அதுபோலவே, கங்கைக்கரைப் பாடலிபுத்திரத்தைக் குறிப்பிட நேர்ந்த இரு இடங்களிலும், “புத்திரம்” என்ற அதன் ஈற்றுப் பகுதியைக் கழித்துவிட்டுப் “பாடலி” என்றே குறிப்பிட்டுள்ளனர். “பொன்மலி பாடலி” (குறுந் : 75 ) “நந்தர் சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம்” (அகம் : 262) என்ற தொடர்களைக் காண்க.


இவ்வாறு, வட இந்திய ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடும் போதும், சமஸ்கிருத மொழியாளர்கள், அப்பெயர்களோடு இணைத்து வழங்கும் “புரம், புத்திரம்” என்பனவற்றை விடுத்தே எடுத்தாள்வதை மரபாகக் கொண்டுவிட்ட பழந்தமிழ்ப் புலவர்கள், தமிழகத்துத் தலையாய நகர்களுள் ஒன்றாகிய காஞ்சிக்கு, அவ்வட நாட்டுப் பெயர் ஈற்றுப் பகுதியாம் “புரம்” என்பதை இணைத்துக் காஞ்சீபுரம் என வழங்கினர் என்பது, வாத நெறியில் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. ஆகவே, அந்நகர்க்குப் பழந்தமிழர் இட்டு வழங்கிய பெயர் “காஞ்சி” என்பதே ; அம்மாநகரில் வந்து வாழத் தொடங்கிய சமஸ்கிருத மொழியாளர், தங்கள் வட நாட்டுப் பெயர் மரபை ஒட்டி, புரம் என்பதைக் காஞ்சியோடும் இணைத்துக் காஞ்சீபுரம் என மாற்றி அழைத்தனர் என்பதே, இயல்பாகப் பெறக்கூடிய முடிவாகும்.

காஞ்சி என்பதே அதன் இயல்பான பெயராயின், ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடும் பழந்தமிழ்ப் பாக்களில், “காஞ்சி” என்ற பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்; ஆனால், அது இடம்