பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

தமிழர் வரலாறு

முத்து (பக்கம் : 22) வேத இலக்கியங்களில் “முக்தா”, “விமுக்தா” என வழங்கப்படுவது கொண்டு, திருவாளர்கள், மெக்டோனால், கெய்த், மோனியர் வில்லியம்ஸ் ஆகிய வரலாற்றுப் பேராசிரியர்கள், சிப்பியிலிருந்து விடுவிக்கப்பட்டது எனப் பொருள் கூறி, அச்சொற்களுக்குச் சமஸ்கிருதம் பிறப்பியல் கூறவும், திருவாளர் அய்யங்கார் அவர்கள், அவர்களின் அம்முடிவை மறுத்துவிட்டு, வேதகால ரிஷிகள், தென்கோடி முத்தோடு, முத்து எனும் பொருள் உடையதான “முத்தம்” என்ற அதன் பெயரையும் கடனாகப் பெற்று, “முக்தா” என்ற சமஸ்கிருத வடிவமும் கொடுத்துவிட்டனர் என உறுதி தொனிக்கும் குரலில் கூறியுள்ளார் (பக்கம் : 23,24)

தமிழகத்தின் தென்கோடியில் வழங்கிய முத்து என்ற தமிழ்ச்சொல், கி. மு. 1500க்கு முன்னரே, வடஇந்தியாவுக்குச் சென்று, அவ்வடவர்களால், “முக்த” என்ற அவ்வடவர்களின் சமஸ்கிருத வடிவம் பெற்று வழங்கலாயிற்று என்றால், கி.மு. நான்காம் நூற்றாண்டில், அதாவது தமிழகத்து “முத்து” என்ற தமிழ்சொல், வடநாட்டிற்குச் சென்று, அவ்வடமொழி வடிவினதாக மாறி வழங்கப்பட்ட காலத்துக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட காலத்தில், தமிழகத்தின் வடவெல்லை நாட்டு நகரின் பெயராம் காஞ்சி. அவ்வடவரால், அப்பிற்பட்ட காலத்தே கொண்டுவரப்பட்ட “காஞ்சீபுரம்” என்ற சமஸ்கிருதச் சொல்லின், சுருங்கிய வடிவமாம் எனல், எங்ஙனம் பொருந்தும். காஞ்சி என்பதே பழந்தமிழ்ப் பெயர் : தங்கள் ஊர்ப் பெயர்களோடு “புரம்” என்பதை இணைக்கும் வழக்கத்தை ஒட்டி, காஞ்சி வந்த ஆரியர்கள், அக்காஞ்சி என்பதன் பின்னர்ப், புரம் என்பதை இணைத்துக் காஞ்சீபுரம் என ஆக்கிவிட்டனர் என்பதே மொழி வளர்ச்சியின் இயல்பு நெறியாகும்.

ஆக, இதுகாறும் எடுத்து வைத்த விரிவான, விளக்கச் சான்றுகளால், "பழந்தமிழ்ப் பாக்களில், காஞ்சி நாடாண்ட பழந்தமிழரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை ; அந்நாட்டுக் காஞ்சி, கச்சி என்ற பெயர்கள் தாமும் தமிழ்ச் சொற்கள்