பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிபுர மாவட்டம்

537

ஆகா ; வடக்கிலிருந்து வந்து அங்கு வாழத் தொடங்கிய சமஸ்கிருத மொழியாளர்கள், அந்நகருக்கு இட்டு வழங்கிய சமஸ்கிருதப் பெயராக, “காஞ்சீபுர” என்பதன் சுருங்கிய வடிவமும், அதன் தமிழாக்க வடிவமுமே ஆம் என்ற, திருவாளர் அய்யங்கார் அவர்களின் கூற்றிற்கான அகச்சான்று எதுவும் இல்லை ; அது வெறும் கற்பனையே, என்பதும், மாறாக அந் நாடாண்ட பழந்தமிழ் அரசர் பெயர் குறிப்பிடப்பட்டுளது ; காஞ்சி என்பது, பழந்தமிழர் அறிந்த தனித்தமிழ்ப் பெயரே ; கச்சி, அதன் தமிழாக்கம் அன்று, மாறாகக், காஞ்சியின் மற்றொரு பெயர் என்பதற்கான அகச்சான்றுகளே நிறைந்துள்ளன என்பதும் தெளிவாக்கப்படவே, “காஞ்சி மாநகர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இடம் பெற்றிருந்தாலும், பண்டைக்காலத்தில், அது தமிழர் நாகரீகத்தைக் கொண்டிருக்கவில்லை : மாறாகச் சமஸ்கிருத நாகரீகத்தின் ஒரு நாயகமாகவே இருந்தது ; அது தமிழ் அரசர்களாலும் ஆளப்படவில்லை ; மாறாக, ஆரிய ராஜாக்களால் ஆளப்பட்டது” என்ற அய்யங்கார் கூற்று, உண்மைக்கு அப்பாற்பட்டது என்பது உறுதிபடத் தெளிவாக்கப்பட்டது.

தொண்டை மண்டலத்துத் தலைசிறந்த நகரின் பெயர், கி. மு. இரண்டாவது நூற்றாண்டு தொட்டே, “காஞ்சி” என்ற தனித் தமிழ்ச் சொல்லினாலேயே பெயர் பெற்றிருந்தது என்பதை உறுதி செய்யும் வலுவான வரலாற்றுச் சான்று ஒன்றும் உளது.

திருவாளர், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் தம்முடைய “தென்னிந்தியா பற்றிய வெளிநாட்டவர் குறிப்புகள்” (Foreign Notices of South India) என்ற ஆங்கில நூலின் நான்காம் பக்கத்தில், திருவாளர் பால் பெல்வியோட் (Pawl Pelliot) என்பாரின் கண்டுபிடிப்பாம், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் “ஹன்” (Han) இனத்தவர் ஆட்சிக்காலத்தில், சீனாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் மிகப்பெருமளவிலான போக்குவரத்து நிலவியதை உறுதி செய்யும், திருவாளர் “பான் கெள” (Pankaw) என்ற,