பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வெளிவரவில்லை. இப்பணியை நிறைவு செய்யவே இருபது ஆண்டுக்கு முன் தமிழக அரசு 'தமிழ்நாடு வரலாற்றுக் குழு' ஒன்றை அமைத்தது. பல்வேறு காரணங்களால் குழு சீராக இயங்காது போயினமையின் சங்க கால வரலாறு வரை மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. குழுவின் பணி அண்மையில் மீண்டும் தொடங்கப் பெற்றுள்ளது.

தமிழக வரலாற்று நூல்கள் பல வெளிவந்திருப்பினும் பி, டி. சீனிவாச அய்யங்காரின் 'தமிழர் வரலாறு' ஆங்கில நூலுக்குப் புகழ் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நீண்ட காலமாக அச்சில் இல்லாதிருந்த காரணத்தால் அதனைத் தேடிப்பிடித்துப் படித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் அதன் மறுபதிப்பு வெளிவந்தபோது தமிழ்மக்கள் மட்டுமல்லாது தமிழர் வரலாற்றில் நாட்டமுடைய மேலை நாட்டறிஞர்களும் விரும்பி வாங்கிப் படிக்கலாயினர்.

இதனைப் பார்த்தபோது ஏன் இதன் தமிழாக்கத்தை வெளியிடக்கூடாது என்ற தூண்டல் எழுந்தது. இதுபற்றித் தமிழகச் சட்டப்பேரவை மேனாள் தலைவரும் கழக நூலாசிரியருமான புலவர் கா. கோவிந்தன் எம். ஏ. அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது தாம் முன்னரே முழுதும் மொழியாக்கம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்துக் கழகம் அதனை வெளியிடலாமென்றும் கூறினார்கள்.

அவருடைய தமிழாக்கத்தைப் பார்த்தபோது ஓருண்மை புலப்பட்டது. சீனிவாச அய்யங்கார் நூலைப்படைக்கும் போது அப்போது தமக்குக் கிடைத்த சான்றுகளைக்கொண்டு வரலாற்றை எழுதினார். அதில் சில செய்திகள் பிற்கால ஆய்வுகளால் மாற்றப்பட வேண்டியதிருந்தது. புலவர் கோவிந்தன் அவர்கள் அப்பணியைத் துணிந்து ஏற்றுக் கொண்டு மூலநூலை முழுவதும் குறைக்காது திரிக்காது மொழிபெயர்த்தபின், எந்த எந்தச் செய்திகள் மறுக்கப்பட வேண்டுமோ, அனைத்துக்கும் தக்க சான்றுகளைக் காட்டி மொழியாக்கம் செய்துள்ளார். எனவே புதிய செய்திகள்