பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன்

சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். வளர்ப்புக் கோழிகளோ, நாய்களோ இம்மனைகளை அணுகா; வளைந்த வாயினை உடைய கிளிகளும், கேட்டுக் கற்ற மறைகளை உரைக்குமளவு, வேதங்களைக் கற்பிக்கும் வேதியர்கள், வாழும் ஊர் அது; பாணர் காள்! நீவிர் ஆங்குச் செல்வீராயின், அகன்ற பெரிய நல்லவானில், வடதிசைக்கண் கிடந்து, ஒளிவீசும் விண்மீனாகிச் சிறப்புற்ற அருந்ததிக்கு நிகரான கற்பும், அழகிய நெற்றியும், வளை அணிந்த கைகளும் உடைய பார்ப்பன மகளிர், ஞாயிறு மறைந்த பின்னர், பதம் பார்த்து ஆக்கி முடித்த, கருடன் என்ற பறவையின் பெயரைப் பெற்ற கருடன் சம்பா அரிசியிலான சோற்றையும், சிவந்த பசுவின் நல்ல மோரில் கடைந்து எடுத்த வெண்ணெயில் வேகவைத்து, மிளகுப் பொடியும், கருவேப்பிலையும் தூவி எடுத்த மாதுளங்காய்க் கறியையும், நெடிய மாமரத்தில் கொத்துக் கொத்தாகக் காய்த்த இளங்காய்களைப் பிளந்து போட்டுப் பண்ணிய ஊறுகாயோடும் பெறுகுவீர்”, எனக்குத் தெரிந்த வரை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு பார்ப்பனச் சிற்றுார் பற்றிய மிகப் பழைய விளக்கம், இதுதான்.


‘செழுங்கன்று யாத்த, சிறு தாள் பந்தர்ப், பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர், மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது; வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின், பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின், நறுநுதல், வளைக்கை மகடூஉ, வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடைப், பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின், மாதுளத் துருப்புறு பசுங்காய்ப் போழொடு, கறிகலந்து, கஞ்சக நறுமுறி அளைஇப், பைந்துணர்,