பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்திரையன் 105

பெறப்படுமாகவே, ‘ஒரு கடலோடி’, ‘கடற்கரை நிலத்தைச் சார்ந்த இனத்தவன்’, ‘அவ்வினத்தலைவன்’ என்று மட்டுமே பொருள்படும். திரையர் என்பார், பெரும்பாலும் இன்று செங்கற்பட்டு, பகுதியில் பண்டு வாழ்ந்திருந்த பழங்குடியினராவர். தொண்டையர்’ என்ற சொல், ‘தொண்டை’ என்ற ஒரு கொடிப் பெயரிலிருந்து பெறப் பட்டதாம். ஆகவே, தொண்டையர் என்பார், தொண்டைக் கொடியைத் தங்கள் சின்னமாகக் கொண்ட, போர் மற்றும் பிற நிகழ்ச்சிகளின்போது, அதை அடையாள மாலையாக, அணியும் அரச இனத்தவர் அல்லது பழங்குடியினரைக் குறிப்பதாகும். தொண்டையர், திரையர் என்ற இரண்டுமே, ஒரே இனத்தவரைக் குறிக்க வழங்கப்படுதலின், திரையர் என்ற இனத்தவர், தங்கள் சின்னமாகக் தொண்டைக் கொடியைக் கொண்டனர் எனக் கொள்ளலாம். தொண்டைமான் என்பது, இளந்திரையன் பட்டப்பெயர் ; தொண்டை மாலைக்கு உரியவன் என்று மட்டுமே அது பொருள்படும். இத்திரையன், தொண்டையர் குலத் தலைவனாயின், அவன், கரிகாலன் பெயரனும் ஆகல் எவ்வாறு இயலும்? அவனுடைய தாய், ஒரு திரையர் குலப்பெண்ணாய் இருந்தால் மட்டுமே அது இயலும், சோழர், திரையர் ஆகிய இரு குலத்த வரின் வழிவந்தவன் இளந்திரையன் என்பது, பெரும்பாணாற்றுப் படையில் குறிப்பிடப்பட்டுளது. இப்பெரிய உலகை அ ள ந் து கண்டவனும், திருவாகிய அழகிய மறு விளங்கும் மார்பினை உடையவனும், கடல் போலும் நிறத்தினை உடையவனுமாகிய விஷ்ணுவின் வழிவந்த, பரந்த இப்பேருலகில், வாழும் உயிர்களைக் காக்கும், வெற்றி முரசு முழங்கும் மூவேந்தர் களுள்ளும் சிறந்த, சோழர் குடியில் வந்தவன் நீ! பரந்தகடலில் பிறக்கும் சங்குகளில், உலகத்தவர் அனைவராலும், குற்றம் தீர்ந்து சிறந்தது எனப் புகழப்படும் வலம்புரிச் சங்கு போலக், குற்றம் இலனும், குண் நலன் உடையனும் ஆகுவை நாட்டில் அறம் அல்லனவற்றை அறவே அழித்து, அறமே சிறக்க ஆளும் ஆட்சி நலன் உடையை ! திரைவழிவந்த மரபில் பிறந்தவனும் ஆகுவை !’ -