பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழர் வரலாறு


கூறியவுடனே பிரிவறிந்து கலக்கமுற்றமையால் மறுமொழி கூற நா எழாமல் போக, அப்பிரிவினைப் பொறமாட்டாத தன் மனக்கலக்கத்தைத், தனக்கு அணித்தாக வளர்ந்திருந்த ஞாழல் மரத்துத் தாழ்ந்த கிளையில், மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்த மலர்க் கொத்தை, இளந்தளிரோடு கொய்து அவற்றை ஒரு சேரக் கசக்கிப் பிசைந்து உதிர்த்ததன் மூலம் வெளிப்படப் பண்ணி அறிவு மயங்கிவிட்ட அவள் துயர் நிலையினை அறிந்திருப்பை அல்லவோ? அறிந்திருக்கும் நீ, அத்துயர் தீர்க்க வேண்டின், அதற்கேற்பத், தேரை ஓட்டுவாயாக!"

அறிதலும் அறிதியோ! பாக1 பெருங்கடல்
எறிதிரை கொழிய எக்கர் வெறிகொள,
வாடுவரி அலவனோடு ஓடுவயின் ஆற்றாது
அசைஇ, உள்ளொழிந்த வசைதீர் குறுமகட்டு,
உயவினென் சென்றுயான் உண்ணோய் உரைப்ப,
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறுமலர்
ஞாழல் அஞ்சினைத் தாழிணர்க் கொழுதி
முறிதிமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே".

-நற்றிணை : 106


இம்மூன்று பாடல்களில், முன்னவை இரண்டும், இளந்திரையன் பாடியனவாகவும், இறுதிப் பாட்டு, தொண்டைமான் இளந்திரையன் பாடியதாகவும் கூறப்பட்டுள்ளன; இருவரும் பெரும்பாலும் ஒருவரே; தானே உணர்ந்து உணர்ந்து பெற்ற உணர்வால் உந்தப்படாமல், பண்டே இருந்து வந்த கவிமரபுத் தொடர்களே, திரும்பத் திரும்ப எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தும் வகையில், இப்பாடல்களில், இயற்கைக்கு மாறான வலிந்து மேற்கொண்ட செயல்பாட்டு நிலையும், சமஸ்கிருதப் பாக்களின் சூழ்நிலைச் சாயலும் கலந்து காற்று வீசுவதாகவே நான் கருதுகின்றேன்;